தமிழ்நாடு

“அமைதி திரும்ப உதவுங்கள்” -மணிப்பூர் நீதிபதியாகும் கிருஷ்ணகுமாருக்கு தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை

மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நீதிபதி கிருஷ்ணகுமார் தனது திறமைகள் மூலம் மாநிலத்தில் அமைதி திரும்ப அரசுக்கு உதவ வேண்டும் என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கேட்டு கொண்டுள்ளார்

“அமைதி திரும்ப உதவுங்கள்” -மணிப்பூர் நீதிபதியாகும் கிருஷ்ணகுமாருக்கு தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார் வழியனுப்பு விழா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நிகழ்த்திய வழியனுப்பு உரையில், அழகான மாநிலமான மணிப்பூர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் நீதிபதி கிருஷ்ணகுமார் தனது ராஜாங்க திறமைகளை கொண்டு, அந்த மாநிலத்தில் அமைதி திரும்ப அரசுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி கிருஷ்ணகுமார் உடன் நெருக்கமான பந்தத்தை கொண்டுள்ளதால் மரபை மீறி அவருக்கு வாழ்த்து கூறுவதாக குறிப்பிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த எட்டு ஆண்டு காலத்தில் 28,248 பிரதான வழக்குகளை முடித்து வைத்துள்ளதாக பாராட்டினார்.

மேலும் தனது கடின உழைப்பு, நேர்மை, உண்மை ஆகிய பண்புகளின் மூலம் தந்தையின் விருப்பத்தை பூர்த்தி செய்து தலைமை நீதிபதியாகி இருக்கிறார் என்றும் மாவட்ட நீதித்துறைக்கும் தலைமை நீதிபதி நிவாரண நிதியை நீட்டித்து நீதிபதி கிருஷ்ணகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் தலைமை நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.

நீதிபதி கிருஷ்ணகுமார்
நீதிபதி கிருஷ்ணகுமார்

இதைத்தொடர்ந்து ஏற்புரையாற்றிய நீதிபதி கிருஷ்ணகுமார், சென்னை உயர்நீதிமன்ற குடும்பத்தில் குழுவாக சாதித்ததை நினைத்து பெருமையுடன் விடை பெறுவதாக குறிப்பிட்டார். மேலும் மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் புதிய அத்தியாயம் சவால் நிறைந்தது என தெரிவித்த நீதிபதி கிருஷ்ணகுமார், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீதித்துறையை மேம்படுத்த வேண்டும் என்றும் நீதி கிடைக்காமல் எந்த குடிமகனும் இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாவட்ட நீதித்துறையில் 72 சதவீத நீதிபதிகள் பலத்தைக் கொண்டு 101% வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக பெருமை தெரிவித்த நீதிபதி கிருஷ்ணகுமார், சென்னை உயர்நீதிமன்றத்திலும் 111 சதவீத வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மாற்றத்துக்கு உரிய சக்தி வாய்ந்த ஆயுதம் சட்டம் என்பதை புரிந்து வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நீதிபதி கிருஷ்ணகுமார் மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருப்பதை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories