மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்திற்கு இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மோதல்போக்கு இருந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டும், அப்பாவி குழந்தைகள் நடுத்தெருவிற்கு வந்தும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி முகாம்களில் வாழ்க்கை நடத்தும் நிலை இன்று வரை தொடர்கிறது. மாநிலத்தை இயல்புநிலைக்கு கொண்டுவராமல் பா.ஜ.க அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.
இந்நிலையில் மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தெரியும் என்று ஒன்றிய அரசை உச்சநீதிமன்றம் காட்டமாக விமர்சித்துள்ளது.
மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கு ஒன்றில், ”மணிப்பூர் வன்முறை குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் வெளியிட்டுள்ள ஆடியோ ஆதாரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மணிப்பூர் வன்முறைக்கு ஆதரவாக முதலமைச்சர் செயல்பட்டுள்ளார் என்கிற விவரங்கள் அதில் கூறப்பட்டுள்ளது.
இது மிக முக்கியமான பிரச்சனை. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு மாதமாக அந்த ஆதரம் மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை” என வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தலைமை நீதிபதி அமர்வில் வாதிட்டார். இதற்கு ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், அட்டர்னி ஜெனரல் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது,நீதிபதிகள் மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கும் தெரியும் என்று ஒன்றிய அரசு வழக்கறிஞர்களிடம் காட்டமாகத் தெரிவித்தனர். பின்னர், சம்பந்தப்பட்ட ஆடியோ விபரங்களை உச்சநீதிமன்றத்தில் ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.