2024ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின், பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியுள்ள தேர்தலாக மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் அறியப்படுகிறது.
இத்தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ், சிவசேனா (தாக்கரே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) உள்ளிட்ட வலிமையான கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுகின்றன.
மறுபுறம், பா.ஜ.க தலைமையிலான NDA கூட்டணி கட்சிகள் இந்தியா கூட்டணியை எதிர்த்து போட்டியிடுகின்றன. அதிகபட்சமாக பா.ஜ.க 148 இடங்களில் போட்டியிடுகிறது. NDA கூட்டணியின் இதர கட்சிகளான சிவசேனா (ஷிண்டே) 82 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 55 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டதையடுத்து, மகாராஷ்டிரா இந்தியா கூட்டணியின் முதன்மை கட்சியான சிவசேனா (தாக்கரே) கட்சி, தங்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
அதில், முக்கிய வாக்குறுதிகளாக இலவச கல்வி வழங்கல் மற்றும் தாராவி திட்டத்தை திரும்பப்பெறுதல் உள்ளிட்ட திட்டங்கள் அமைந்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே, பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை ஆண் மாணவர்களுக்கும் செல்லுபடியாக செய்வோம் என்பதும், அதானி குழுமத்துடன் இணைந்து தாராவி பகுதியை தனியார்மயமாக்கல் செய்யும் திட்டத்திற்கு தடையிடுவோம் என்பதும் தான் அவ்விரு முக்கிய வாக்குறுதிகள்.
குறிப்பாக, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், தொழில் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி உண்டாக்குவும் துணை புரிகிற உட்கூறுகள், சிவசேனா (தாக்கரே) கட்சி வாக்குறுதிகளில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாக்குறுதிகள், மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாய் அமைந்துள்ளதால், மகாராஷ்டிரா முழுமையிலிருந்தும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது.