டிசம்பர் 2ஆம் நாள் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் தர்காவில் தமிழ்நாடு அரசு சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நாகூர் கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 45 கிலோ சந்தனக் கட்டை வழங்கப்பட்டதற்கு தர்கா நிர்வாகிகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த ஆய்வினை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,
“நாகூர் தர்காவில் வருகின்ற டிசம்பர் மாதம் 2ஆம் நாள் நாகூர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ள காரணத்தினால் தற்பொழுது அமைச்சருடன் இங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளேன்.
குறிப்பாக சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ள காரணத்தினால் நாகூர் தர்கா பகுதிக்கு வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து அதிக யாத்திரையாளர்கள் வரவுள்ள காரணத்தினால், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.
குறிப்பாக இங்கே வருகை புரியக்கூடிய பொது மக்களுக்கு தங்கும் வசதிகள் தொடர்பாகவும், 500 மீட்டர் இடைவெளியில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தரும்படியும் ஆய்வு மேற்கொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
மேலும் இந்த சந்தனக்கூடு திருவிழாவிற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 45 கிலோ சந்தன கட்டைகளை வழங்கி உள்ளோம். கடற்கரைகளில் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மொழிகளிலும் தகவல் பலகைகளை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.