பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் விதமாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி "புதுமைப்பெண்" திட்டத்தை, கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின்படி, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து மேற்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு பட்டம், டிப்ளமோ, தொழிற்படிப்புகளில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்காக 370 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் வரை 159 கோடி ரூபாய் மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 818 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இதன்மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கும் 360 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2 லட்சத்து 42 ஆயிரத்து 827 மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி, கடந்த 3 மாதங்களில் 69 கோடியே 54 லட்சம் ரூபாய் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், புதுமைப்பெண் திட்டத்தைப்போல், தமிழ்ப்புதல்வன் திட்டமும் மாபெரும் வெற்றி பெற்று, உயர்கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தமிழ்நாடு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.