சென்னையில் பார்ப்பனர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் முன்னாள் நடிகை கஸ்தூரி பங்கு பெற்று, தெலுங்கு சமுதாயத்தினரையும், பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களையும் குறித்து இழிவான முறையில் பேசினார்.
மேலும், தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத மேடையிலும் கலந்துகொண்டு அவதூறு பரப்பும் வகையில் பேசினார். இந்நிலையில், கஸ்தூரியின் பேச்சிற்கு தமிழ்நாடு முழுவதிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், நேற்றைய (நவம்பர் 5) நாள், தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் புகார் அளித்ததன் அடிப்படையில், 4 பிரிவுகளில் எழும்பூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து இன்று (நவம்பர் 6), கஸ்தூரி மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், மதுரை திருநகர் காவல்நிலையத்தில் கஸ்தூரி மீதும், நம் தேசம் பாரத் என்கிற யூடியூப் பக்கம் மீதும் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பகைமை உணர்வுகளை வளர்ப்பது, பிற நபர்களுக்கு இடையே பகைமை அல்லது வெறுப்பு ஏற்படுத்துவது ஆகியவற்றின் அடிப்படையில் 296(b),196(1)(a),197(1)(c),352,353(3) BNS r/w sec 67 IT Act பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.