தமிழ்நாடு

முன்னாள் நடிகை கஸ்தூரியின் அவதூறு பேச்சு : தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கண்டனம்!

அரசு ஊழியர்களின் குறிப்பிட்ட பிரிவினர் அதிகமான லஞ்சம் பெறுவதாக பேசிய முன்னாள் திரைப்பட நடிகை கஸ்தூரியின் தரம் தாழ்ந்த பேச்சிற்கு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கண்டனம்.

முன்னாள் நடிகை கஸ்தூரியின் அவதூறு பேச்சு : தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னையில் பார்ப்பனர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் முன்னாள் நடிகை கஸ்தூரி பங்கு பெற்று, தெலுங்கு சமுதாயத்தினரையும், பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களையும் குறித்து இழிவான முறையில் பேசினார்.

மேலும், தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத மேடையிலும் கலந்துகொண்டு அவதூறு பரப்பும் வகையில் பேசினார். இந்நிலையில், கஸ்தூரியின் பேச்சிற்கு தமிழ்நாடு முழுவதிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இது குறித்து, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் திரைப்பட நடிகை கஸ்தூரி, தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணிபுரியும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகிறார்கள் என்றும், இவர்கள் அதிக லஞ்ச லாவனியம் பெற்று, அளவிற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ளனர் என்றும் பொய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

முன்னாள் நடிகை கஸ்தூரியின் அவதூறு பேச்சு : தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கண்டனம்!

குறிப்பாக, இவர்களால்தான் அரசுத்துறைகளில் மிக அதிகமான அளவில் வாழல்கள் மலிந்துள்ளதாகவும், பொத்தாம் பொதுவான வகையில் தரம்தாழ்ந்த ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை பொது வெளியில் தெரிவித்துள்ளார்.

தனியாரின் தரக்குறைவான ஆதாரமற்ற இப்பேச்சிற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசுத்துறைகளில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள் அரசின் திட்டங்களை பொது மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்த்திடும் பொருட்டு, இரவு பகல் பாராமலும், கண் துஞ்சாமலும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி பணிபுரிந்து அரசுக்கு நற்பெயர் ஈட்டித்தரும் இவ்வேளையில், எங்கோ அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் சில நிகழ்வுகளை வைத்துக்கொண்டு ஒருசில குறிப்பிட்ட பிரிவுகளைச் சார்ந்த அரசு அலுவலர்களின் பணியினை கொச்சைப்படுத்திடும் விதமாக எவ்வித அடிப்படை ஆதாரமின்றி பொய்யான குற்றச்சாட்டுக்களை பொதுவெளியில் தெரிவித்திருப்பதன் மூலம் சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்த விழைகிறார் என்றே கருதுகிறோம்.

தனியாரது இம்மாதிரியான தரம்தாழ்ந்த பேச்சு மாநிலம் முழுவதும் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக நீதியை நீண்ட நெடுங்காலமாக கடைபிடித்துவரும் தமிழ் மக்கள் இதனை அனுமதிக்கமாட்டார்கள்.

எனவே, குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களை பொதுமக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை ஏற்படுத்திடும் விதமாக பேசிய முன்னாள் திரைப்பட நடிகை கஸ்தூரி அவர்களின் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories