ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்த கொண்டாட்டத்தின்போது மக்கள் பலரும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்வர். ஆனால் பட்டாசு வெடிக்கும்போது சிலர் ஆர்வக் கோளாறில் தங்கள் கைகளில் வைத்தும், பிறர் மீது எறிந்தும் பட்டாசு வெடிப்பர்.
இதனால் ஆண்டுதோறும் தீ விபத்துகள் ஏற்படும். இந்த தீ விபத்துகளை தடுப்பதற்காக ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதோடு பட்டாசை பாதுகாப்பாக வெடிக்கவும், காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கவும் தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்படுவதும் வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நேற்று (அக்.31) கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மக்களுக்கு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டு, பல விசயங்கள் அறிவுறுத்தப்பட்டது. எனினும் தீபாவளியின்போது பட்டாசுகள் மூலம் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்க்க முடியாததாகவே கருதப்படுகிறது.
இந்த சூழலில் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் விழிப்புணர்வு நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் அதிகமாகி இருப்பதாகவும், அதன் பலன் தான் இந்த எண்ணிக்கை குறைவு என்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவு துறை தலைவர் நெல்லையப்பர் பேட்டி அளித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்து. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை பட்டாசு வெடித்ததில் தீக்காயம் ஏற்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு 26 பேர் இந்த ஆண்டு நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.
கீழ்ப்பாக்கம் தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவில் இந்த ஆண்டு பட்டாசு வெடித்து 26 பேர் வந்ததில் 22 பேருக்கு லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று விடு திரும்பினர். 3 குழந்தைகள் உட்பட 4 பேருக்கும் மட்டும் 12 சதவீதத்திற்கும் கீழ் பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பட்டாசு வெடித்து கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளின் எண்ணிக்கையானது குறைந்திருக்கின்றது. குறிப்பாக கடந்தாண்டு பட்டாசு வெடித்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு 29 பேர் வருகை தந்த நிலையில் இந்த ஆண்டு மூன்று பேர் குறைந்து இருப்பது ஆறாக உள்ளது.
இது குறித்து கீழ்பாக்கம் தீக்காய சிகிச்சை சிறப்பு பிரிவு துறை தலைவர் நெல்லையப்பர் பேசியதாவது, “கடந்தாண்டை விட இந்த ஆண்டு பட்டாசு வெடித்து சிகிச்சைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அரசு பல நாட்களுக்கு முன்னதாக இருந்த ஏற்படுத்திய விழிப்புணர்வும் பொதுமக்களின் ஒத்துழைப்பு தான் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
மேலும் நான்கு பேர் உள் நோயாளிகளாக சிகிச்சையில் இருக்கின்றனர். அவர்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள். அதிநவீன உபகரணங்கள் இருக்கக்கூடிய சூழலிலும் அதனை பயன்படுத்த வேண்டிய சூழல் இந்த ஆண்டு வரவில்லை. வந்த அனைவருக்கும் 12 சதவீதத்திற்கும் கீழ் தான் தீக்காயம் இருந்தது.” என்றார்.