ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்த கொண்டாட்டத்தின்போது மக்கள் பலரும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்வர். ஆனால் பட்டாசு வெடிக்கும்போது சிலர் ஆர்வக் கோளாறில் தங்கள் கைகளில் வைத்தும், பிறர் மீது எறிந்தும் பட்டாசு வெடிப்பர்.
இதனால் ஆண்டுதோறும் தீ விபத்துகள் ஏற்படும். இந்த தீ விபத்துகளை தடுப்பதற்காக ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதோடு பட்டாசை பாதுகாப்பாக வெடிக்கவும், காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கவும் தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்படுவதும் வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நேற்று (அக்.31) கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மக்களுக்கு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டு, பல விசயங்கள் அறிவுறுத்தப்பட்டது.
எனினும் தீபாவளியின்போது பட்டாசுகள் மூலம் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்க்க முடியாததாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ விபத்து தொடர்பாக 232 அவசர அழைப்புகள் பெறப்பட்டுள்ளது என தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப்பணிகள் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :
கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளி தினத்தை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதனால் ஏற்படக்கூடிய விபத்துகள் தொடர்பாக இந்த வருடம் கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடும் பொழுது குறைவான தீ விபத்து தொடர்பான அழைப்புகள் வந்துள்ளதாகவும் மாறாக தமிழகத்தில் தீ விபத்து தொடர்பாக ஒருவர் உயிரிழந்ததாகவும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறி 150 அவசர அழைப்புகளும் இதர தீ விபத்து தொடர்பாக 82 அவசர அழைப்புகளும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளது. மொத்தமாக இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று மொத்தமாக 232 தீ விபத்துகள் தொடர்பான அவசர அழைப்புகள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தீ விபத்துகளில் 544 பேர் காயமடைந்து ஒரு சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பெரும்பாலானோர் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதேபோல் தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினால் மேற்கொள்ளப்பட்ட தொடர் விழிப்புணர்வு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும்பொழுது இந்த ஆண்டு குறைந்த அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தீ விபத்து தொடர்பாக வரக்கூடிய அவசர அழைப்புகள் மீது தீயணைப்புத்துறை துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதாலும் பெரும் அவசரமா விதங்கள் எதுவும் இன்றி தவிர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் ஏ.டி.ஜி.பி.ஆபாஷ் குமார் தெரிவித்துள்ளார்.