சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் 108 அவசரகால மேலாண்மை மையத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (அக்.30) இரவு நேரத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அழைப்புகள் வருகிற விதம், ஆம்புலன்ஸ் எண்ணிக்கை, கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் விபத்து பகுதி என அறியப்பட்டுள்ள Hotspots-ஐ கண்காணிப்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், அவசரகால அழைப்புகளை விரைவாகவும் கவனமுடனும் எதிர்கொண்டு, மக்கள் இடர்பாடுகளின்றி விழாக் காலத்தை எதிர்கொள்ள துணை நிற்க வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி பேசியது வருமாறு :
“தீபாவளியை முன்னிட்டு மருத்துவ சேவைகளிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக 108 அவசர கால சேவை மையத்திற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 12,000 அழைப்பு வரும். ஆனால் தீபாவளி நேரம் என்பதால் கூடுதலாக 2000 அழைப்பு பெறுவது வழக்கம். தீபாவளி நேரத்தில் எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் கூடுதலாக 194 பணியாளர்கள் அழைப்புகளை ஏற்கும். அந்த பணிகளை ஈடுபட்டிருக்கிறார்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட கூடுதலாக தீக்காயுடன் மற்றும் சாலை விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஏற்கனவே ஸ்பெஷல் வார்டு இருக்கிறது. அமைச்சர் அவர்கள் கூடுதலாக தீ காயங்களாக மட்டும் அவசரகால மருத்துவ உதவியாளர்கள் மற்றும் அவசரக்கால மேலாண்மை மையத்தில் பணிபுரியவர்களுக்கு தேவையான அறிவுரைகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் புதுக்கோட்டை அவசர கால மேலாண்மை மையம் இணைந்து செயல்படுவகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களுக்கும் தடையின்றி ஆம்புலன்ஸ்களை இயக்க முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். கடந்த கால அனுபவத்தின் அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 108 அவசரகால மேலாண்மை மையத்தை அழைக்க பிரத்யேக எண் வழங்கப்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை பட்டாசு வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரை, அதுபோல் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே அதிக சத்தம் இல்லாத பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
இதனை இந்த ஆண்டும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். மேலும் அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் பத்திரமாக தீபாவளி கொண்டாடுமாறு பொதுமக்களை நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.