தீபஒளித் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு அறிவித்த தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பெருந்திரளான மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
அதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் சார்பிலும் நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது மட்டுமல்லாமல், தனியார் பேருந்துகளிலும் அரசு பேருந்து கட்டணத்தில் பயணிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன் எதிரொலியாக, சென்னையில் இருந்து நாள் ஒன்றுக்கு தொடர்வண்டி, பேருந்து, வானூர்தி, தனி வாகனம் மூலம் பெரும் கூட்டமே, நீண்ட கால விடுமுறை நாட்களில் இளைப்பாற சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள தகவலில், “தீபஒளித் திருநாளை முன்னிட்டு, சென்னையில் இருந்து நேற்று (அக்டோபர் 29) ஒரே நாளில் 2.31 லட்சம் பயணிகள் அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று (அக்டோபர் 30) நேற்றை விட கூடுதலான பயணிகள், சொந்த ஊர்களுக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.