தமிழ்நாடு

விஜய் யாரை மகிழ்ச்சிப்படுத்த நினைக்கிறார்? : ஜவாஹிருல்லா கேள்வி!

மக்களைப் பிளவுபடுத்தும் பாசிச பாஜக ஆட்சியை வெளிப்படையாக விமர்சிக்காதது ஏன்? ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

விஜய் யாரை மகிழ்ச்சிப்படுத்த நினைக்கிறார்? : ஜவாஹிருல்லா கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா முழுவதும் ஒன்றிய பாஜக அரசின் துணையோடு தலைவிரித்தாடும் பாசிசத்தை எதிர்த்து நிற்கும் சக்திகளை " அது பாசிசம் என்றால் இது பாயாசமா.?" எனக் கேட்டு கேலிசெய்வது யாரை மகிழ்ச்சிப்படுத்த? என நடிகர் விஜய்க்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

நடிகர் விஜய் அவர்கள் தனது கட்சியின் முதல் மாநாட்டில் ஆற்றிய உரையில்வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் பல வினாக்களை எழுப்பியுள்ளன

திராவிடமும் தமிழ்த் தேசியமும் இரு கண்கள்,

கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு ஆகிய கருத்துகள் வரவேற்கத்தக்கவையே என்றாலும் அது பாசிசத்தை எதிர்த்துக் களத்தில் நிற்கும் திமுகவை விமர்சிக்கும் உள்நோக்கத்தோடு இச்சூழலில் சொல்லப்படுகின்றன என்ற கருத்தையும் புறந்தள்ள முடியாது.

திராவிட மாடல் ஆட்சியை வெளிப்படையாக விமர்சித்த விஜய், மக்களைப் பிளவுபடுத்தும் பாசிச பாஜக ஆட்சியை வெளிப்படையாக விமர்சிக்காதது ஏன்?

இந்தியா முழுவதும் ஒன்றிய பாஜக அரசின் துணையோடு தலைவிரித்தாடும் பாசிசத்தை எதிர்த்து நிற்கும் சக்திகளை " அது பாசிசம் என்றால் இது பாயாசமா.?" எனக் கேட்டு கேலிசெய்வது யாரை மகிழ்ச்சிப்படுத்த?

பெரும்பான்மை சிறுபான்மை பிளவுவாத அரசியலில் கூடாது என்று விஜய் பேசி இருப்பது வஞ்சிக்கப்படும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை. பெரும்பான்மை வாதத்தைத் தனது கோட்பாடாகக் கொண்டு பிளவுவாதத்தை இம்மண்ணில் நிலைநிறுத்துவது பாசிச பாஜக மட்டுமே.

பெரும்பான்மை வாதத்தின் மூலம் அறியாமை கொண்ட மக்களின் மனதில் வெறுப்பு அரசியலை விதைத்து அரசியல் ஆதாயங்களை அறுவடை செய்து வரும் பாஜகவும் பாசிச அபாயங்களுக்கு எதிராக ஒருங்கிணையும் சிறுபான்மை மதச்சார்பற்ற சக்திகளையும் சமப்படுத்துவது சரியான பார்வை அல்ல.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories