தமிழநாட்டு வீரர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லவும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் விதமாக சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதில் இருந்து விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், TN Champions Foundation“ அறக்கட்டளை நிதியிலிருந்து, சீனாவில் வருகின்ற டிசம்பர் 1 முதல் 7-ந் தேதி வரை நடைபெறவுள்ள 4 வது உலக ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில் (சிறுவர் மற்றும் சிறுமியர்) கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள 24 வீரர், வீராங்கனைகளுக்கு போட்டிக்கான செலவினமாக தலா ரூ.1,00,000 வீதம் 24,00,000 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தாய்லாந்து நாட்டில் 1.12.2024 முதல் 7.12.2024 வரை நடைபெறவுள்ள உலக திறன் விளையாட்டு இளைஞர் போட்டியில் கலந்து கொள்ள உள்ள 5 நரம்பியல் சார் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு விமான கட்டணம், தங்குமிட செலவினம் மற்றும் போட்டிக்கான நுழைவு கட்டணத்திற்கான மொத்த செலவுத்தொகை ரூ.7,95,000க்கான காசோலையை துணை முதலமைச்சர் வழங்கினார்.
பின்னர் தூத்துக்குடியைச் சேர்ந்த சைக்கிளிங் விளையாட்டு வீரர் சூர்யபிரகாஷ் அவர்கள் தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் அவருக்கு “TN Champions Foundation“ அறக்கட்டளை நிதியிலிருந்து பந்தய சைக்கிள் வழங்க தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் பரிந்துரை செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சைக்கிளிங் விளையாட்டு வீரர் சூர்யபிரகாஷ் அவர்களுக்கு ரூ.8,60,000/- மதிப்பிலான அதிநவீன பந்தய சைக்கிளை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் “TN Champions Foundation“ அறக்கட்டளை நிதியிலிருந்து வழங்கினார்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து மொத்தம் 30 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.40,55,000 ரூபாய்க்கான விளையாட்டு போட்டிகளுக்கான உதவிகளை வழங்கினார்.