இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்.31-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்த சூழலில் கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சென்னையில் இருந்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு ஏற்பாடு செய்துள்ள சிறப்பு பேருந்துகள் இயக்கத்தின் முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் செயல்பட்டு வரும் மருந்தகத்திலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் இணைய முன்பதிவு மையத்திலும், புதிதாக கட்டப்பட்டு வரும் காவல் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பேருந்து முனையத்தில் செயல்பட்டு வரும் உணவகங்களில் உணவு சாப்பிட்டவர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டிருந்த அமைச்சர்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் ஏறி போக்குவரத்து இயக்கங்கள் தொடர்பாக பயணிகளிடம் கேட்டு அறிந்தனர்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது, “தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். நாளை (அக்.28) முதல் 30-ம் தேதி வரை 5 லட்சம் பயணிகள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் 3,408 தீபாவளி திருநாளுக்காக இயக்கப்படும் அரசு சிறப்பு பேருந்துகள் 4,250, ஆமினி பேருந்துகள் 2,000 ஆகும்.
ஓய்வுநிலை பேருந்துகள் நிறுத்தமிடம் ஒன்றில் மதுரை அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும், ஓய்வுநிலை பேருந்துகள் நிறுத்தம் இரண்டில் நாகர்கோவில், திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், மூன்றாம் இடத்தில் கோவை, சேலம், விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், நான்காம் இடத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படும்.
இந்த பேருந்துகள் இயக்கப்படும் பொழுது கூடுதல் பேருந்துகள் தேவை என்றால் முன்கூட்டியே பேருந்துகள் எடுத்து வரப்பட்டு நிறுத்தும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளும், மறைமலைநகர் நகராட்சி மைதானத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படும். பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் தேவையான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் செய்யப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் பேட்டரி பொருத்தப்பட்ட 8 வாகனங்களும், மாநகர கழக போக்குவரத்து நிறுத்தத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்து நிறுத்தம் வரை பிரத்யேக பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்கள் சிரமமின்றி பேருந்துகளை தெரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கம் தொடர்பாக தொடர்ந்து ஒளி பெருக்கி மூலம் தெரிவிக்கப்படும்.
பெரிய அளவில் மக்கள் திரண்டு வரும் நிலையில், இலவச மருத்துவ மையமும், ஆம்புலன்ஸ் வசதியும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் பயணிகள் அமர்ந்து செல்ல இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதிக்காக கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூய்மை பணியாளர்கள் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளனர்.
பிரத்யேகமாக மூன்று உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது 7845700557, 7845727920, 7845740921. அது மட்டும் இல்லாமல் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் 8 பொருத்தப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் 18 பொருத்தப்பட்டுள்ளது. தாய்மார்கள் பிள்ளைகளுக்கு பாலூட்ட மூன்று பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு ஆட்டோ டாக்ஸி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏராளமான ட்ராலிகள் வழங்கப்பட்டுள்ளது. 140 எண்ணிக்கையில் தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முதல்வர் வழங்கிய உத்தரவுப்படி தலைமைச் செயலாளர் ஒன்றிய அரசிடம் பேசி சுங்கச்சாவடிகளில் நெரிசல் இல்லாமல் செல்வதற்காக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்று சேர்வதற்கு போக்குவரத்து கழகம் சார்பில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு ஜீப் வழங்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதுவரையில் போக்குவரத்து துறை சார்பில் இது செய்யப்பட்டது கிடையாது.
தங்களது சொந்த வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பழைய மகாபலிபுரம் சாலை திருப்போரூர் வழியாகச் சென்றால் மாநகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதவியாக இருக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
பண்டிகை காலங்களில் இதற்கு முன் கோயம்பேட்டிற்கு எப்படி மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதோ அதுபோல கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு சென்னையின் பல்வேறு பகுதியில் இருந்து தாம்பரத்திலிருந்து ஐந்து நிமிடத்திற்கு ஒரு மாநகர பேருந்து, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பத்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து கூடுதலாக இயக்கப்படும்.
தனியார் பேருந்துகள் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அதற்கான டிக்கெட்டை அரசுதான் வழங்க உள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்டது போல பயணிகளுக்கு அந்த பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இணைப்போக்குவரத்து ஆணையர்கள், துணை போக்குவரத்து ஆணையர்கள் குழுக்கள் ஆம்னி பேருந்துகளில் ஆய்வு செய்வார்கள். செயலிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்ற தகவல் எங்களுக்கு வர வர நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். ரெட்பஸ் போன்ற செயலிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளோம். நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் அந்த பேருந்துகள் நிறுத்தப்படும்; அபராத வசூலிக்கப்படும்” என்றார்.
இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா,போக்குவரத்து ஆணையர் தசுன்சோங்கம் ஜடக் சிரு, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மாநகர் போக்குவரத்துக் கழக (MTC) மேலாண் இயக்குநர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தாம்பரம் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சமய், பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் ஏ.சி.கார்த்திகேயன் SETC மேலாண் இயக்குநர் ஆர்.மோகன், TNSTC மேலாண் இயக்குநர் கே.குணசேகரன், தலைமை நிர்வாக அலுவலர் டாக்டர் பால் பிரின்சிலி ராஜ்குமார், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, போக்குவரத்துக் கழக இணை மேலாண்மை இயக்குநர் எஸ்.நடராஜன், பொது மேலாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.