சென்னை கலைவாணர் அரங்கில் திராவிட இயக்க கருத்தியல் திராவிடக் கருத்தியல் ஆசிரியர்கள் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, சங்கத்தை தொடக்கி வைத்து, அதற்கான இலச்சினையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, கோவி. செழியன், எழிலன் எம்.எல்.ஏ., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “சங்கிகள் நாடு முழுவதும் கல்வியை காவிமயமாக்க நினைக்கின்ற இந்த நேரத்தில், இந்த திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது மிகவும் அவசியமான ஒன்று. இது காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம்.
தமிழ்நாட்டில் 1912 ஆம் ஆண்டு டாக்டர் நடேசனாரால் தொடங்கப்பட்ட திராவிட இயக்கத்தின் முதல்பணியே, பார்ப்பனர்கள் அல்லாத மாணவர்கள் அனைவரும் கல்வி கிடைக்க உதவுவதற்காகதான். அதுமட்டுமல்ல, பட்டம் பெற்ற பார்ப்பனர்கள் அல்லாத மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தியதோடு, திராவிடர் மாணவர் விடுதியையும் தொடங்கி, பிறப்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி பெற வழிவகை செய்தார்.
எல்லாரும் படிக்க வேண்டும் என்று தோன்றியது தான் திராவிட இயக்கம். அந்த நோக்கத்திற்காகதான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடினார்கள். அதனால்தான் படித்ததோடு அல்லாமல், பிறகுக்கு பாடம் எடுக்கும் நிலைமைக்கு தமிழ்நாட்டு ஆசிரியர்கள் வளர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார் தான் என்று பேரறிஞர் அண்ணா கூறுவார்.
படித்தவர்களிடம் திராவிட இயக்கச் சிந்தனைகள், கொள்கைகளை கொண்டு சேர்ப்பதுதான் மிகவும் சவாலான விசயம். இதில் பி.எச்டி போன்ற படிப்புகளை படித்த நீங்கள் திராவிட இயக்க கருத்துகளை ஏற்றுகொண்டதில் அந்த கருத்து எவ்வளவு வலிமை வாய்ந்ததாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் இன்றும் கூட ‘திராவிடம்’ என்ற வார்த்தையை கேட்டால் சங்கிகளுக்கு அலர்ஜியாகிறது; கதறுகிறார்கள்.
வங்கிக்கடன் வாங்கியாவது உயர்க்கல்வி படி என்று சொல்வது திராவிடம். குலத்தொழில் செய்; கடன் தருகிறோம் என்று சொல்கிறது ஆரியம். இதற்காகவே விஷ்வகர்மா என்ற திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது. இதுபோன்ற பிற்போக்குத்தனமான திட்டங்களை எல்லாம், திராவிட மாடல் அரசுதான் முன்னின்று தடுத்து வருகிறது.
மாநிலங்களுக்கு ஆளுநர்கள் வருவார்கள் என்று நினைத்தால், ஆரியநர்கள் தான் வருகிறார்கள். ஆளுநர் வேலையைப் பார்ப்பதற்கு பதிலாக, அவர்கள் கல்வி வளாகங்களின் சங்கிகளை உருவாக்கும் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் காலக்கட்டத்தில் திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் தேவை என்பது முக்கியமானது” என்றார்.