தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (24.10.2024) தலைமைச் செயலகத்தில், தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று முதல் ஆண்டிலேயே அகில இந்திய தொழிற் தேர்வில், இந்திய அளவில் பல்வேறு தொழிற் பிரிவுகளில் முதலிடம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 மாணவ, மாணவியர்களும் மற்றும் காட்டுமன்னார் கோவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய பயிற்றுநர் ஒருவரும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 2877.43 கோடி ரூபாய் செலவில் டாடா டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டன.
தொழிற் பயிற்சி நிலையங்களுக்கான அகில இந்திய தொழிற் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது. 2023-2024-ஆம் கல்வியாண்டு தேர்வு 12.08.2024 முதல் 9.09.2024 வரை நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 26,236 அரசு தொழிற்பயிற்சி மாணவ, மாணவியரும் மற்றும் 19,097 தனியார் தொழிற்பயிற்சி மாணவ, மாணவியரும் என மொத்தம் 45,333 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
இத்தேர்வில் 24,853 (94.72%) அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும், 16,738 (87.64%) தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும், என மொத்தம் 41,591 (91.74%) மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தமிழ்நாட்டில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களில் பயிற்சி தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே Industrial Robotics தொழிற் பிரிவில் வேப்பலோடை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவன் என்.அந்தோணிசேசுராஜ் மற்றும் திருச்சி, அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவி என். மோகன பிரியா ஆகியோர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
Manufacturing Process Control and Automation தொழிற் பிரிவில் சிதம்பரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவி யு. பிரசிதா மற்றும் வேப்பலோடை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவர் எஸ். மணிமுருகன் ஆகியோர் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.
Information Technology தொழிற் பிரிவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்), கோயம்புத்தூரை சார்ந்த செல்வி கே. இந்துஸ்ரீ அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் நவீன கால தொழிற்பிரிவுகள் உட்பட்ட பல்வேறு தொழிற் பிரிவுகளிலும் தமிழ்நாட்டை சேர்ந்த 19 அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவியரும் மற்றும் 5 தனியார் தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவியரும் என மொத்தம் தமிழ்நாட்டை சேர்ந்த 29 மாணவ மாணவியர் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.
பயிற்றுநர்களுக்கான பயிற்சியில் (CITS) பயிற்சி பெற்ற காட்டுமன்னார் கோவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை சேர்ந்த பயிற்றுர் வி. ஸ்வேதா, Welder தொழிற் பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இவ்வாறு, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 29 மாணவ மாணவியரும் மற்றும் 1 பயிற்றுநரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இன்றைய தினம் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.