வடசென்னை பகுதியில் அமைந்துள்ள திரு.வி.க நகர் பேருந்து நிலையத்தை சர்வதேச தரத்தில் புரனமைக்கும் பணிகள் நடைபெறும் என சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்துக்காக 5 கோடியே 35 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பேருந்து முனையத்தில் பயணச்சீட்டு வழங்கும் கவுண்டர்கள், பயணிகள் வசதிகள், சுற்றியுள்ள நிலப்பரப்புடன் கூடிய காத்திருப்பு ஓய்வறைகள், சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் ஒரே நேரத்தில் 12 பேருந்துகள் நிற்கும் வகையில் வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தவிர பேருந்து முனையத்தில் 12 கடைகள், ஏடிஎம் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 2 பொதுக் கழிவறைகள் மற்றும் பணியாளர்களுக்கான தனிக் கழிவறைகளும் அமைக்கப்பட உள்ளது. மேலும் பேருந்து நிலையத்தில் மழை நீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், சர்வதேச தரத்திலான பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வடசென்னை பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.