தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையில் e-sports அறிமுகம்! : இந்தியாவின் முன்னோடியாக தமிழ்நாடு!

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையில் e-sports அறிமுகம்! : இந்தியாவின் முன்னோடியாக தமிழ்நாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னையில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஈ ஸ்போர்ட்ஸ் (e-sports) அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஈ ஸ்போர்ட்ஸ் என்றால் என்ன?

இன்றைய கால குழந்தைகளுக்கு கைப்பேசி, தொலைக்காட்சி, கணினி தான் உலகம் என்ற அளவிற்கு எப்பொழுதும் கைப்பேசி பயன்பாடு அதிகரித்துள்ளது.

ஆனால், அவ்வாறு கணினியில் விளையாடுவதிலும் எதிர்காலம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், உலக அளவில் இந்த நடைமுறை பெருமளவு அதிகரித்திருந்தாலும், இந்திய அளவில் தனியார் மயமாக மட்டுமே, இந்நடைமுறை செயல்முறையில் இருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் முதல் முறையாக ஜாய் ஸ்டிக், கைப்பேசி, கணினி மூலம் விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுக்கென போட்டிகள் நடத்தப்பட்டது. இந்தியாவில் முதல் முறையாக ஈ ஸ்போர்ட்ஸை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்து வெற்றிகரமாக முடித்துள்ளது.

ஃபிபா கால்பந்து போட்டி, என் பி ஏ கூடைப்பந்து, ஃபார்முலா ஒன் கார்ப்பந்தயம், ஸ்ட்ரீட் ஃபைட்டர், பி ஜி எம், பிரபல ஜப்பான் விளையாட்டான PokeMen, செஸ் உள்ளிட்ட எட்டு வகையான ஆன்லைன் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 5000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், தகுதிச்சுற்று மூலம் 110 வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். ஆன்லைன் விளையாட்டுக்கு தமிழ்நாடு அரசு ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும், எதிர்காலத்தில் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார் தமிழ்நாடு ஈ ஸ்போர்ட்ஸ் சங்க தலைவர் சிரிஷ்.

இது குறித்து, அவர் அளித்த பேட்டியில், அண்மையில் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டியில் ஈ ஸ்போர்ட்ஸ் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு துபாயில் ஈ ஸ்போர்ட்ஸ்க்கென உலகக் கோப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் ஒலிம்பிக் போட்டிகளிலும் ஈ ஸ்போர்ட்ஸ் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு மூலம் இளைஞர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாக முதலமைச்சர் கோப்பையில் வெற்றி பெற்ற வீரர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர் என்றார்.

e-விளையாட்டு வீரர் அளித்த பேட்டியில், “இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டு போட்டிகள் முதலமைச்சர் கோப்பை மூலம் அறிமுகப்படுத்தியிருப்பது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஈ ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகள் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொட்டிக்கிடப்பதாகவும், இதில் இந்தியா வளர்ந்துவரும் நாடாக திகழ்வதாகவும் டெக்னாலஜி உலகம் வரவேற்கிறது. எதிர்காலத்தில் ஒலிம்பிக் ஈ ஸ்போர்ட்ஸில் இந்தியா தடம்பதிப்பதற்கான விதையை தமிழ்நாடு அரசு இந்த முதலமைச்சர் கோப்பை மூலம் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories