தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (20.10.2024) சேலம் நேரு கலையரங்கில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற விழாவில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலி, கைத்திறன் பேசி, மூளை முடக்குவாத சிறப்பு இருக்கை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் 3,583 பயனாளிகளுக்கு ரூ.33.26 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 707 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 1,070 விளையாட்டு உபகரண தொகுப்புகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் பேசியதாவது,
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 707 ஊராட்சி மன்றங்களுக்கு, 1,070 எண்ணிக்கையிலான கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் வழங்குதல், 202 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 600 சகோதரிகளுக்கு 23 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக்கடன் இணைப்புகள் வழங்குதல், 300 பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்துறை சார்பாக நலத்திட்டங்கள் மற்றும் ‘கலைஞர் கனவு இல்லம் திட்டம்’ சார்பில் வீடுகளை ஒதுக்கீடு செய்வது என்று பல்வேறு துறைகளின் சார்பில் 3 ஆயிரத்து 600 பயனாளிகளுக்கு, ரூபாய் 34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்.
தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளுக்கு, ரூ.86 கோடி மதிப்பில், விளையாட்டு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று, ‘கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினோம். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 26 மாவட்டங்களில் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸை வழங்கி இருக்கிறோம்.
இங்கே மேடையிலே 2 முக்கியமான வீரர்கள் அமர்ந்து இருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த, Para Athlete தம்பி மாரியப்பன் தங்கவேலு இங்கே வருகை தந்திருக்கிறார்கள். அதே போல, தமிழ்நாட்டின் பெருமையாக திகழும் Para Badminton வீராங்கனை தங்கை துளசிமதி முருகேசன் அவர்களும் இங்கே வருகை தந்து இருக்கின்றார்.
இந்தியாவின் தங்க மகன் மாரியப்பன் தங்கவேலுவும், தங்கை துளசிமதியும், Para Olympic உட்பட ஏராளமான சர்வதேச – தேசிய அளவிலான போட்டிகளில் எண்ணற்றப் பதக்கங்களை குவித்தவர்கள். இவர்கள், விளையாட்டுத் துறையில், சாதிக்கத் துடிக்கும் பலருக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் நாம் அனைவரும் கைத்த்தட்டல் மூலமாக நமது பாராட்டுக்களை தெரிவிப்போம்.
தங்கை துளசிமதி பேசும்போது, அண்ணன் மாரியப்பன் தங்கவேலுதான் எனக்கு இன்ஸ்பிரேசன் என்று குறிப்பிட்டார். எனக்கு இன்ஸ்பிரேசன் தங்கை துளசிமதிதான். கல்லூரி படிக்கும் காலத்தில் நானும் பேட்மிட்டன் விளையாடி வந்தேன். ஆனால் அதன் பிறகு நேரம் கிடைக்கவில்லை. இப்போது தங்கை துளசிமதி அவர்களின் சாதனைகளை பார்த்து, நான் வாரத்திற்கு ஒரு முறையாவது, ஒரு மணி நேரமாவது பேட்மிட்டன் ஆடவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன்.
இவர்களை போல இன்னும், பல நூறு விளையாட்டு வீரர்களை உருவாக்கவேண்டும் என்றுதான், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை வருடந்தோறும் நடத்தி வருகிறோம்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்காக, இந்த வருடம் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 36 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கடந்த ஆண்டு 6 லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். இந்த ஆண்டு கிட்டத்தட்ட 11 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளார்கள். இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கான பரிசுத் தொகையை, நம் முதலமைச்சர், 37 கோடி ரூபாயாக உயர்த்தித் தந்திருக்கிறார்கள்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கடந்த ஆண்டு சேலம் மாவட்டம் 19-ஆவது இடத்தில் இருந்தது. இந்த முறை, 3 ஆவது இடத்தில் இருக்கிறது. இன்று தேதி 20, கடைசி போட்டி 23 ந்தேதி வரை உள்ளது. எனவே நீங்கள் இரண்டாவது இடம் அல்லது முதல் இடம் பெற வாய்ப்பு உள்ளது. அதே போல, நாமக்கல் மாவட்டம், கடந்த ஆண்டு, 13 ஆவது இடத்தில் இருந்தது, இந்த முறை 9-ஆவது இடத்துக்கு வந்திருக்கிறது. தொடர்ந்து முன்னேறிட நாமக்கல் வீரர்களுக்கும் என் வாழ்த்துகள்.
நம் முதலமைச்சர் கடந்த 3 வருடங்களில் மட்டும், 3 ஆயிரத்து 350 விளையாட்டு வீரர்களுக்கு, 110 கோடி ரூபாய் அளவுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார்கள். முதலமைச்சர் அவர்களின் சீரிய நடவடிக்கையால், முதற்கட்டமாக விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், முதல் கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு, அரசுப்பணி வழங்க இருக்கிறோம் என்பதை கூறிக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தனது சொந்த நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாயை வழங்கி தொடங்கி வைத்தார்கள். ஏழை எளிய மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து நிதி உதவிகளை வழங்கி வருகின்றோம். இதன் மூலம் பயனடைய விரும்பும் வீரர்கள், TNCF இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பரிசீலிக்கப்பட்டு உடனடியாக அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இந்த அறக்கட்டளை மூலமாக கடந்த 2 ஆண்டுகளில், 680 வீரர்களுக்கு 12 கோடி அளவுக்கு நிதி உதவி வழங்கியுள்ளோம்.
சமீபத்தில் பாரிஸில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டில் இருந்து 6 மாற்றுத்திறனாளி வீரர்களை அனுப்பி வைத்தோம். நம்முடைய தங்கை துளசிமதி, மாரியப்பன் தங்கவேலு உள்பட நான்கு வீர்ர்கள் பதக்கம் வென்று வந்தார்கள். அவர்களுக்கு மொத்தம் 5 கோடி ரூபாய் நம் முதலமைச்சர் உயரிய ஊக்கத்தொகை வழங்கினார்கள்.
விளையாட்டு வீரர்களுக்கு, மட்டுமல்ல, மகளிருக்கு இது ஒரு பொற்கால ஆட்சியாக உள்ளது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்தான் 1989 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களைத் தொடங்கினார்கள்.
நம்முடைய முதலமைச்சர் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்களின் சகோதரிகள் பலர், இன்றைக்கு தொழில் முனைவோராக உயர்ந்துள்ளீர்கள். சுய உதவிக்குழுக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், 96 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக்கடன் இணைப்புகளை நம் அரசு வழங்கியுள்ளது.
மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்திட கழக அரசு எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு முதல் கையெழுத்திட்டு, நம் முதலமைச்சர் செயல்படுத்தினார்கள். இத்திட்டத்தின் மூலம் இதுவரை 530 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கிறீர்கள். ஒவ்வொரு மகளிரும் மாதம் 900 ரூபாய் சேமிக்க முடிகிறது.
மகளிர் காலையில் எழுந்து பிள்ளைகளுக்கு சமைத்துக் கொடுக்க சிரமப்படக் கூடாது என்று, தினமும் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை, நம் முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள்.
அரசுப்பள்ளியில் படித்து உயர் கல்வி சேரும் மாணவிகளுக்கான ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் மூலம், மூன்று லட்சம் மாணவிகள், மாதம் 1000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகை பெற்று வருகின்றனர். இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ஒரு திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் மாதம் 1000 ரூபாயை பெற்று வருகின்றனர்.
இங்கே 300 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களை கொடுக்க இருக்கிறோம். பல ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் இருந்த நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால், இன்றைக்கு பட்டா உங்களைத் தேடி வந்திருக்கிறது. சேலத்தில் மட்டுமல்ல, தலைநகர் சென்னையிலும் பட்டா பிரச்சினை இருந்தது. இதனை தீர்க்க முதலமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர் தலைமையில்குழு ஒன்றை அமைத்தார்கள்.
அந்தக்குழுவின் நடவடிக்கையால், இன்றைக்கு சென்னையில் சுமார் 36 ஆயிரம் பட்டாக்கள் தயார் செய்யப்பட்டு, மக்களிடம் கொடுத்து வருகிறோம். தமிழ்நாடு முழுவதும், பட்டா பிரச்சினை தீர்ப்பதற்கு நிச்சயம் நம் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்கள்.
‘சொந்த வீடு’ எனும் கனவை நனவாக்க, ‘கலைஞர் கனவு இல்லம்’திட்டத்தை நம் முதலமைச்சர் அறிவித்தார்கள். இங்கே, ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம் மூலம் வீடுகளை பெற்றுள்ள 45 பயனாளிகளுக்கும் என் வாழ்த்துகள்.
75 மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளுக்கு, இங்கே மூன்று சக்கர ஸ்கூட்டர் உட்பட ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம். மாற்றுத்திறனாளிகளை தாயுள்ளத்தோடு நடத்தக்கூடிய அரசாக நம் திராவிட மாடல் அரசு திகழ்கிறது. கழக அரசு அமைந்தவுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை நம் முதலமைச்சர் 1,000 மாக இருந்ததை 1,500 ரூபாயாக உயர்த்தினார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகையை இரு மடங்கு உயர்த்தி வழங்கி வருகின்றார்கள்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் அவர்களின் படிப்புக்கு ஏற்ப ஆண்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெறுகிறார்கள்.
கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸைபெற வருகை தந்துள்ள, அத்தனை ஊராட்சிகளுக்கும், என்னுடைய வாழ்த்துகள். கலைஞர் விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு நன்றாக விளையாடுங்கள். அவற்றை பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள். விளையாட்டு உபகரணங்களை, நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று, நிச்சயம் ஆய்வு செய்வோம். கிராம ஊராட்சிகளில் மட்டும் வழங்கப்பட்டு வரும், கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸை, நம் முதலமைச்சர் அவர்களின் அனுமதியைப் பெற்று, நகரங்களிலும் வழங்குவதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கே வெற்றிகரமாக செயல்படுகின்ற 2 மகளிர் சுய உதவிக்குழுக்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். சேலம் மாவட்டம் ஆத்தூரில் செயல்பட்டு வருகிற ஆனந்தம் மகளிர் சுய உதவிக்குழுவினர் வருகை தந்திருக்கிறீர்கள். இந்தக்குழு கடந்த 2020-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சிறிய அளவில் தொடங்கப்பட்ட இக்குழுவில், இன்றைக்கு ஒவ்வொரு சகோதரியும், தொழில் முனைவோராக உயர்ந்துள்ளனர்.
இந்தக்குழுவின் மொத்த சேமிப்பு ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தக்குழுவினருக்கு இதுவரை ரூபாய் 13 லட்சம் அளவுக்கு வங்கிக்கடன் இணைப்புகளை வழங்கி, நம்முடைய அரசு, ஊக்கப்படுத்தி உள்ளது. ஆனந்தம் மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகள் வாழ்வில், மேலும் ஆனந்தம் பெருகட்டும். அவர்களுக்கு என் பாராட்டுகள்.
அதே போல, அயோத்தியாப்பட்டினம் ஒன்றியம், சின்னகவுண்டாபுரம் ஊராட்சியிலிருந்து, 7-ஆவது மைல் மகளிர் சுயஉதவிக்குழுவினர்’ வருகை தந்துள்ளீர்கள். 2001-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தக்குழுவில், இப்போது 20 சகோதரிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் சிறிய அளவில் கடன்பெற்ற இக்குழுவின் சகோதரிகள், இன்று பல்வேறு சுயதொழில்களை செய்து வருகின்றனர். இக்குழுவினரின் 23 ஆண்டு உழைப்புக்கு பலனாக, இவர்களுடைய தற்போதைய சேமிப்பு, ரூ.30 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இக்குழுவின் ஒவ்வொரு சகோதரியும், மாதம் 20 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி வருகின்றனர்.
இவர்களுக்கு ரூபாய் 1 கோடிக்கும் மேலாக வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு குழுக்களுமே, சிறப்பாக செயல்பட்டதற்காக, தமிழ்நாடு அரசின், மணிமேகலை விருதினை பெற்றுள்ளனர். இந்த சகோதரிகளைப் போல இங்கே வந்திருக்கும் ஒவ்வொரு மகளிரும் வாழ்வில் சாதிக்க வேண்டும். அதற்காகத் தான் இன்றைக்கு 23 கோடி ரூபாய் அளவுக்கு வங்கி கடன் இணைப்புகளை வழங்கியுள்ளோம். இதனை நம் முதலமைச்சர் வெறும் கடன் தொகையாக பார்க்கவில்லை. உங்கள் உழைப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கைத் தொகையாகத்தான் பார்க்கிறார்கள்.
விளையாட்டுத்துறை சார்பில் சேலம்– நாமக்கல் மாவட்டங்களில்மேற்கொள்ளப்படும் சில திட்டங்களை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, சேலத்தில் மாவட்ட பன்னோக்கு விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று வாக்குறுதியை நம்முடைய முதலமைச்சர் அளித்திருந்தார்கள். அதன்படி, 20 கோடி ரூபாய் மதிப்பில் மாவட்ட பன்னோக்கு விளையாட்டு மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தோம்.
அதன்படி, இப்பகுதியில், மேட்டூர், ஆத்தூர், சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதிகளில், தலா ரூபாய் 3 கோடி மதிப்பில் Mini Stadiums கட்டப்பட உள்ளன. சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம், 3 கோடியே 63 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்படவுள்ளது. ஆகவே, சேலம் – நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், இந்த வசதிகளை எல்லாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு முக்கியமான அறிவிப்பை அறிவிக்கச் சொன்னார். நீண்ட நாள் கோரிக்கையான விளையாட்டு வீரர்கள் தங்கி பயிற்சி பெற சேலத்தில் விடுதி அமைத்து தர ரூ.7 கோடி மதிப்பீட்டில் 60 வீரர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் விரைவில் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அமைக்க அனுமதி வழங்கியுள்ளார்கள்.