தூத்துக்குடி மாவட்டம் புது பச்சேரி என்ற கிராமத்தில் வயதான பெரியசாமி - மாலதி என்ற தம்பதி வசித்து வருகின்றனர். பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளியான இவர்கள், 10-ம் வகுப்பு வரை படித்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், Wire நாற்காலி பின்னும் தொழிலை செய்து வந்துள்ளார் மாற்றுத்திறனாளி முதியவர் பெரியசாமி.
ஆனால் தற்போது இந்த வியாபாரம் பெரிதாக செல்லவில்லை என்பதால் வீட்டில் இருந்து வருகிறார். இவர்களது 34 வயதுடைய மகனுக்கு திருமணமாகி மகன் இருக்கும் சூழலில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி கொஞ்சம் கொஞ்சமாக ரூ.10 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பது இந்த தம்பதிக்கு தெரியவில்லை. இந்த சூழலில் இவர்கள் 1991-ம் ஆண்டில் இருந்து முதியோர் உதவித்தொகை பெற்று வரும் நிலையில், கடந்த செப்டம்பர் 1 முதல் தற்போது வரை உதவித்தொகை பணம் வராமல் இருந்துள்ளது.
எனவே இவர்கள் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட வங்கி மற்றும் அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த தம்பதி தனியார் செய்தி ஊடகம் இது குறித்து தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் தங்களை கவனித்து கொள்வதற்கு ஆள் இல்லை என்றும், இந்த உதவித்தொகை நம்பி தாங்கள் இருப்பதாகவும், எனவே உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
இந்த செய்தி வெளியானதையடுத்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, களத்தில் இறங்கினார். இதையடுத்து இந்த உதவித்தொகை நிச்சயம் கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :
“எனது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். வங்கி IFSC எண் தவறாக இருந்ததால் அவர்களுக்கு இந்த சிரமம் நேர்ந்துள்ளது. உடனே அதை சரி செய்து கொடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளேன். விரைவில் அவர்களின் கோரிக்கையான மாதாந்திர உதவித்தொகை நிச்சயம் கிடைக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.