எழுத்தாளரும், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான முரசொலி செல்வம் நேற்று (அக்.10) பெங்களூருவில் காலமானார். முரசொலி செல்வம் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், சினிமாத்துறை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதோடு தற்போது சென்னை, கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வம் உடலுக்கு பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று பிற்பகலில் முரசொலி செல்வம் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
அந்த வகையில் விசிக தலைவரும் எம்.பி-யுமான தொல்.திருமாவளவன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேட்டியளித்த அவர், கலைஞருக்கு முரசொலி மாறன் மனசாட்சியாக இருந்தது போல தளபதி ஸ்டாலினுக்குமனசாட்சியாக முரசொலி செல்வம் இருந்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசியது வருமாறு :
“முரசொலி செல்வம் மறைவு தமிழ்நாட்டு அரசியலிலும் பத்திரிகை உலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியலில், குறிப்பாக திமுக அரசியலில் நன்கு அறியப்பட்டவர். கலைஞருக்கு முரசொலி மாறன் மனசாட்சியாக இருந்தது போல, தளபதி ஸ்டாலினுக்கு முரசொலி செல்வம் மனசாட்சியாக இருந்தார்.
முரசொலி மாறன் மறைந்தபோது கலைஞர் எப்படி பெரும் பாதிப்புக்கு உள்ளானாரோ, துயரத்தில் ஆழ்ந்தாரோ, அதேபோல முரசொலி செல்வத்தை இழந்த நிலையில், தற்போது தளபதி ஸ்டாலின் அவர்கள் மிகுந்த துயரத்தில் புழங்குகிறார்கள். அந்த அளவுக்கு திமுகவுக்கு, திமுகவின் பாதுகாப்பில் மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர் முரசொலி செல்வம்.
வெற்றி கரமாக பத்திரிகையை நடத்தியதோடு மட்டும் இல்லாமல், தொடர்ந்து அரசியல் விமர்சன கட்டுரைகளையும் எழுதி வந்தவர். இதனால் அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபை குறித்த செய்தியை வெளியிட்டதற்காக தண்டனைக்குட்படுத்தப்பட்டார். ஆனாலும் பணிந்து விடாமல் தொடர்ந்து தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
முரசொலி சிலந்தி என்கிற பெயரில் அவர் எழுதிய கட்டுரைகள் எதிர் தரப்பாருக்கு பெரிய சவாலாக விளங்கியது. அந்த அளவுக்கு உலக அளவில் அரசியல் புரிதலை பெற்றிருந்தவர். மிசா காலத்தில் திமுகவும் திமுக தலைவரும் சந்தித்த நெருக்கடிகளில் இவருக்கும் பங்கு உண்டு. அவருடைய இழப்பு திமுகவுக்கும் ஊடக உலகத்தினருக்கும் பெரும் இழப்பு. அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கு திமுகவினருக்கும் விசிக சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.