ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் போன்றவற்றிற்கு “சமக்ரா சிக்ஷா” என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கி வருகிறது.
அதன்படி, 2024-2025 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டிற்கு 3,586 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் பங்கு 2,152 கோடி ரூபாய் (60 விழுக்காடு). ஒன்றிய அரசின் பங்களிப்பின் முதல்தவணை ரூ.573 கோடியை ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்காமல் உள்ளது.
மேலும்,முந்தைய ஆண்டுக்கான 249 கோடி ரூபாயையும் ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இதனால், பின்தங்கிய நிலையில் வாழும் இலட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி மற்றும் ஆசிரியர்களை நேரடியாக பாதித்துள்ளது. குறிப்பாக 32,500 அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இருந்தும் இதுவரை வரை ஒன்றிய அரசு நிதியை விடுவிக்கவில்லை.
இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நலன் கருதி செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ”ஒன்றிய அரசின் கல்வி அமைச்சரிடம் 2 முறை நேரில் சென்று நானே கோரிக்கை வைத்தேன். கடந்த செப்.27 ஆம் தேதி முதலமைச்சர் அவர்களும் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து நிதியை விடுவிக்க வலியுறுத்தியிருந்தார். ஆனால் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான நிதி இதுவரையில் வழங்கப்படவில்லை.
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 32,500 அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு மாநில அரசின் நிதி பங்களிப்போடு செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிப்பது என முதலமைச்சரின் உத்தரவின் படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.