தமிழ்நாடு

பிரிவினை பேசுபவர்களுக்கு பதலடி தரும் வகையில் பேரணி! : ஆசிரியர் கி. வீரமணி அறிவிப்பு!

திராவிடர்களை ஒருங்கிணைத்து, திராவிடர் கழகம் மிகப்பெரிய பேரணியை நடத்தும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

பிரிவினை பேசுபவர்களுக்கு பதலடி தரும் வகையில் பேரணி! : ஆசிரியர் கி. வீரமணி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

பிறப்பின் அடிப்படையில் உயர்சாதி ஆதிக்கம், கல்வி, வேலை வாய்ப்பில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பனர்கள் சென்னையில் நவம்பர் 4 ஆம் நாள் பேரணி நடத்தப் போகிறார்களாம்; அப்படியெனில் மறுநாள் நவம்பர் 5 ஆம் நாள் திராவிடர்களை ஒருங்கிணைத்து, திராவிடர் கழகம் மிகப்பெரிய பேரணியை நடத்தும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, கோடானு கோடி பெரும்பான்மை மக்களை பஞ்சமர் எனவும், சூத்திரர் எனவும், சரி பகுதியாக உள்ள பெண்கள் ஆகியோரை இழிவுபடுத்தி, அவர்களது கல்வி, உத்தியோக, வாழ்வுரிமைகளைப் பறித்ததோடில்லாமல், இன்றும் அவர்களின் பிறவியே இழிவான பிறவி என்று சாஸ்திரத்திலும், சட்டத்திலும், சடங்கு சம்பிரதாய ஸநாதன முறைகளிலும் அடிமைகளாக்கி வைத்திருப்பது ஆரிய பார்ப்பனியமே ஆகும். (வேதம், மனுதர்மம் போன்றவை ஆதாரங்கள்).

பார்ப்பனர் அல்லாதாரை வேசி மக்கள் என்றும், பாவயோனியில் பிறந்தவர்கள் என்றும் எழுதி வைத்திருப்போர் யார்? ‘கீழ்சாதி' மக்கள் என்ற அவர்கள் கட்டிய கோவிலில், பார்ப்பன அர்ச்சகர்களுக்கே கருவறை உரிமை, கோபுரங்கள் எட்டி இருந்து கடவுளை வணங்கவே என்று விளக்கம் கூறும் நிலையில், சூத்திர, பஞ்சம என்பதோடு ‘சண்டாளர்கள்’ என்று கூறியும், சுடுகாட்டில் கூட ஒதுக்கி வைத்து, அந்த உழைக்கும் மக்களை ஒடுக்கி வைத்திருப்பதற்குக் காரணம், ஆரிய, வேத, இதிகாச, புராண, கீதை போன்றவற்றின்படி கடவுளால் சொல்லப்பட்டவையே என்று புளுகி, நம்ப வைத்துள்ளனர்.

அப்படிப்பட்ட நூலை (கீதை போன்ற)சில நீதிமன்றங்களில்கூட பிரமாணம் எடுக்க பயன்படுத்த வேண்டுமென்று சொல்லி, பிரச்சாரம் செய்வது யார்? கீதையைத் தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்போர் யார்?

“பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்” என்று கூறும் கீதையைப் பரப்புபவர்கள் யார்? மனுதர்மத்தின் எட்டாம் அத்தியாயம் 415 ஆவது சுலோகத்தில் ‘சூத்திரன்’ என்ற சொல்லிற்குப் பொருள் வேசி மக்கள் என்று மிகமிகக் கேவலமாக சொல்லியுள்ளது அவமானம் அல்லவா? ‘சூத்திரன்’ என்ற பிரிவு சட்ட அங்கீகாரமும் பெற்றுள்ளது பெரும்பகுதி மக்களை இழிவுபடுத்தும் கொடுமை அல்லவா?

பார்ப்பனப் பெண்களையும் சேர்த்து, அனைத்துப் பெண்களையும் ‘நமோ சூத்திரர்‘ என்போர் யார்? ஒட்டுமொத்த பெண்களை (பார்ப்பனப் பெண்களையும் சேர்த்து) ‘நமோ சூத்திரர்கள்’ என்று அழைக்கும் சாஸ்தர நிலைப்பாட்டை எப்போதாவது தவறு என்று கூறியிருக்கிறார்களா?

இவர்கள் தங்களை இழிவுபடுத்துகிறார்கள் என்று கூறி, அதற்காக அவர்களைப் பாதுகாக்கத் தனியே பழங்குடி, ஆதிதிராவிட மக்களுக்குள்ளதுபோல (எஸ்.சி., எஸ்.டி.) தனிச் சட்டம்போல கொண்டு வரவேண்டுமாம்!

அதற்காக கோவையில் ஊர்வலமாம்! சென்னையில் நவம்பர் 4 இல் பேரணி என்று தி.மு.க. ஆட்சியாளரை மறைமுகமாக மிரட்டி, பொய்யழுகை, போலிக் கூச்சல் போட்டு ‘பாவ்லா’ காட்டுகிறார்கள்! பார்ப்பனர்களே, ஏன் இந்த பாசாங்கும், புலம்பலும்? ‘பஞ்ச தந்திரங்களைப்’ பயன்படுத்தியே தங்களது ஆதிக்கத்தினை வெகு சிறுபான்மையினராக இருந்தும், பெரும்பான்மையினரை அடிமைப்படுத்தியுள்ள சூது மதி, சூழ்ச்சி ‘ஆரியமாயை’ இப்போது புதிய வேஷம் கட்டி ஆட ஆரம்பித்துள்ளது!

கல்வி, உத்தியோக ஏகபோகம் இன்றும் யாரிடம்?

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் விகிதாச்சாரப்படி 3 சதவிகிதத்தினர் தானே 90 விழுக்காட்டிற்குமேல் அனுபவித்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிகளில் யார் ஆக்கிரமித்துள்ளனர்? விரலை மடக்க முடியுமா? என்ன ‘கேடு’ வந்துவிட்டது பார்ப்பனர்களுக்கு? மற்றவர்கள் வாழும் காலத்திலும் புரோகிதருக்கு வருமானம்; செத்தாலும் (வரி போல) வருமானம் இப்படி பிழைப்போருக்கு என்ன இழிவை மற்ற ஒடுக்கப்பட்ட, உரிமைகள் பறிக்கப்பட்ட சமூகத்தினர் இழைத்துவிட்டனர்? ஏன் இந்தப் பாசாங்கும், புலம்பலும்?

பார்ப்பன பாரதியே பாடினாரே, “பேராசைக் காரனடா பார்ப்பான்” என்று, அதையா பரப்புகிறோம் இன்று?

“சூத்திரனுக்கொரு நீதி தண்டச்

சோறுண்ணும் பார்ப்பானுக்கு வேறொரு நீதி,

சாத்திரம் சொல்லிடு மாயின்

அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்”

என்று பாடியது யார்?

தேசிய மகாகவி சுப்பிரமணிய பாரதிதானே! அவர் யார்? சூத்திரரா? பஞ்சமரா? ‘நண்டு கொழுத்தால் வளையில் தங்காது’ என்று கிராமியப் பழமொழி ஒன்று உண்டு. அதுதான் நமக்கு நினைவுக்கு வருகிறது.

நவம்பர் 4 ஆம் நாள் பார்ப்பனர்கள் பேரணி என்றால், மறுநாள் திராவிடர் கழகம், திராவிடர்களை ஒருங்கிணைத்துப் பேரணி நடத்தத் தயார்! பேரணி நடத்துகிறார்களாம். அடுத்த நாள் நவம்பர் 5 இல் திராவிடர் எழுச்சிப் பேரணியை, சென்னையில் மிகப்பெரிய அளவில் திராவிடர்கள் ஒருங்கிணைந்து நடத்திக் காட்டுவார்கள்!

பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள், உரிமையைப் பறிகொடுத்தவர்கள் நாங்கள், உண்மையில் ஊர்வலம் நடத்தி உரிமை கோர வேண்டியவர்கள் நாங்கள், நாங்களேதான்! ஆனால், பறித்த நீங்கள் படாடோபம் காட்டி, பாசாங்குத்தனம் செய்கிறீர்கள்!

பொய் அழுகை, போலிக் கூச்சல் என்ற பொல்லாங்கில் ஈடுபடுகிறீர்கள்! தி.மு.க. ஆட்சிக்கு எதிராக சில விபீடணர்களை விலைக்கு வாங்கி, இம்மாதிரி வித்தைகளில் ஈடுபட்டு, விபரீதத்தை உருவாக்குகிறீர்கள்! களமாட நாங்கள் தயார்! தயார்!!

எங்களிடையே மேலும் எழுச்சியை ஏற்படுத்த உதவிடும் உங்களுக்கு எமது நன்றி! நன்றி!!

banner

Related Stories

Related Stories