பொதுவாக இரயில் பயணத்தின்போது, வாசல்படியில் நின்றோ, அமர்ந்தோ பயணம் செய்யக்கூடாது என்று விதி உள்ளது. ஆனால் ஒரு சில இளைஞர்கள் அதனை பெரிதாக மதிக்காமல், அவ்வாறு பயணம் செய்வர். இன்னும் ஒரு படி மேலே சென்று, ஒரு சில இளைஞர்கள் ஓடும் இரயிலில் சாகசம் செய்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
இவ்வாறு உயிரிழப்புகள் சம்பவம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மேலும் அவர்கள் இறப்பு குறித்த வீடியோவும் வெளியாகி பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் கூட சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர், சைதாப்பேட்டை இரயில் நிலைய நடைமேடையில் உரசி சுமார் 100 மீட்டரையும் தாண்டி தரதரவென இழுத்து சென்று, தண்டவாளத்தில் விழுந்து உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்த வீடியோவும் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் வேலூரில் இளைஞர் ஒருவர் ஓடும் இரயில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வடுகன்தாங்கல் பகுதியில் உள்ள என்.டி.டி.எப்-ல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் அஸ்வந்த் (17) என்ற இளைஞர். திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரோடு கக்கலூர் பகுதியைச் சேர்ந்த அஸ்வந்த், கல்லூரியில் தங்கி படித்து வந்தார்.
இந்த சூழலில் இவர் விடுமுறைக்காக திருவள்ளூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விடுமுறை முடிந்தவுடன் கல்லூரிக்கு வருவதற்காக சென்னையில் இருந்து மைசூர் செல்லும் இரயிலில், திருவள்ளூரில் இருந்து காட்பாடி வரை பயணம் செய்துள்ளார். அப்போது இவர் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இளைஞர் அஷ்வந்த், எதிர்பாராத விதமாக ஓடும் இரயிலில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இளைஞர் விழுந்ததை கண்ட அருகில் இருந்தவர்கள் பதறி கத்தியுள்ளனர். இதையடுத்து இதுகுறித்து இரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த அவர்கள் அஸ்வந்தை, முகம் சிதைந்து உயிரிழந்த நிலையில் கண்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து உயிரிழந்த அஸ்வந்தின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறாய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவன் ஓடும் இரயிலில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.