தமிழ்நாடு மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று(செப்டம்பர் 3) ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி அளித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது, “முதலமைச்சர் அமெரிக்கா சென்று திரும்பிய பின் மெட்ரோ, மீனவர்கள் சிக்கல், தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி தொடர்பாக பிரதமரை சந்தித்து கோரிக்கை வைப்பேன் என கூறியிருந்தார். கடந்த 27ஆம் நாள் முதலமைச்சர் பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்தார். 15 நிமிடங்கள் கொடுக்கப்பட்டாலும் 40 நிமிடங்கள் முதலமைச்சர் பிரதமரிடம் பேசினார்.
அதன் வெளிப்பாடாக, தற்போது மெட்ரோ 2ஆம் கட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது மிகவும் காலதாமதமாக எடுக்கப்பட்ட முடிவு. காலத்தோடு இந்த முடிவை எடுத்திருந்தால் பணிகள் விரைவாக முடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். காலதாமதம் என்றாலும் முதலமைச்சரின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக இதை பார்க்கிறோம்.
ஒன்றிய அரசிடம் மெட்ரோ தொடர்பாக பல மாதங்களாக கோரிக்கை வைத்துள்ளோம். ஒன்றிய அரசு நிதி ஒதுக்காத நிலையிலும் மாநில அரசு மக்கள் நலன் கருதி இந்த பணியை செய்து வருகிறது. ஒன்றிய அரசு தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்கள் என்று எண்ணாமல் அனைத்து மாநிலங்களுக்கும் பாகுபாடின்றி செயல்பட வேண்டும்.
இயற்கை பேரிடரின் போது தமிழ்நாடு, வயநாட்டிற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை. பாஜக ஆளாத மாநிலங்களை புறக்கணிக்கும் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு அணுகியதால் தான் மெட்ரோ 2ஆம் கட்டத்திற்கு தாமதமாக நிதி கிடைத்தது.
ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை செல்கிறார். தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குகின்றனர். இது தொடர்பாகவும் முதலமைச்சர் பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு உரிய நடவடிக்கையை ஒன்றிய அரசாங்கம் எடுக்க வேண்டும். முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று மீனவர்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணுவர் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.