தமிழ்நாடு அமைச்சரவையை மாற்றியமைக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை ஆளுநரிடம் பரிந்துரை செய்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சரவை மாற்றத்திற்கு கடந்த செப். 28-ம் தேதி ஒப்புதல் அளித்தார். இந்த ஒப்புதலை தொடர்ந்து கடந்த செப்.29-ம் தேதி அமைச்சரவையில் புதிதாக இடம்பெறும் அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் மாளிகையில் இரா.ராஜேந்திரன், வி.செந்தில் பாலாஜி, கோவி.செழியன், சா.மு.நாசர் ஆகிய 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில், அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு ஆளுநர் ரவி பதவி பிராமணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு
* வி.செந்தில் பாலாஜி - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை,
* கோவி. செழியன் - உயர்கல்வித்துறை, (தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்)
* ஆர்.இராஜேந்திரன் - சுற்றுலா, சர்க்கரை, கரும்புத்தீர்வை, கரும்புப்பயிர் மேம்பாடுத்துறை
* சா.மு.நாசர் - சிறுபான்மையினர், வெளிநாடுவாழ் தமிழர் நலன், வஃக்ப் வாரியம் துறை,
- உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இல்லாத அளவு முதன்முறை 4 பட்டியலின அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் அக்.8-ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
புதிதாக 4 அமைச்சர்களும், துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினும் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.