தொழிற்சாலைகளின் உற்பத்தி திறன், மதிப்பு கூட்டுதல், வேலைவாய்ப்பு, மூலதன உருவாக்கம் போன்றவற்றின் அடிப்படையில், அவற்றின் அமைப்பு மற்றும் வளர்ச்சியில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் குறித்த விரிவான தகவல்களை தெரிவிக்கும் நோக்குடன், ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆண்டுதோறும் தொழிற்சாலைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், 2022-23-ம் நிதியாண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி, 2022-23-ம் ஆண்டின் விலை நிலவரம் அடிப்படையில், மொத்த மதிப்பு கூட்டுதல் அதற்கு முந்தைய ஆண்டை விட 7.3% அதிகரித்துள்ளது. இந்தக்கால கட்டத்தில் இடுபொருட்களின் அளவு 24.4% அதிகரித்துள்ள வேளையில், உற்பத்தி பொருளின் அளவு 21.5% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும்,அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய முன்னணி மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், திராவிட மாடலுக்கு மற்றுமொரு மணிமகுடம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து துணை முதலமைச்சர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "இந்திய ஒன்றியத்திலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்றும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதிலும் தமிழ்நாடு முதலிடம் என்றும் ஒன்றிய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழில் கொள்கையின் நீட்சியும், நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முயற்சியும் இப்போது நல்ல விளைச்சலை தந்துக் கொண்டிருக்கின்றன.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியால் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக 2030ஆம் ஆண்டுக்குள் உயர்த்திடுவதற்கான பணிகள் நம் திராவிட மாடல் அரசால் தொடரும், உயரும்” என தெரிவித்துள்ளார்.