சென்னையில் மாநகர பேருந்துகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கைக்கு இணையாக சென்னை புறநகர் மின்சார ரயில்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்பட்டு வருகிறது. பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் மின்சார ரயில்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன..
உதாரணமாக ஒரு நாளைக்கு மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டால் சென்னை மாநகரமே திக்குமுக்காடிவிடும். சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, சென்ட்ரல்- அரக்கோணம், சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, கடற்கரை-வேளச்சேரி என ஆகிய ரயில் சேவை சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளை இணைக்கிறது.
இதில் சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடம் முக்கியமான வழித் தடமாக உள்ளது. இந்த வழித்தடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 18 ரயில் நிலையங்கள் உள்ளன. மேலும் அந்த ரயில் ரயில் நிலையங்களை ஒட்டி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால், இந்த வழித்தடத்தில் ஓடும் மின்சார ரயில்கள் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பு வரை, இந்த வழித்தடத்தில் நாள்தோறும் சுமார் 1 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர்.
இந்நிலையில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே சுமார் 279 கோடி ரூபாய் செலவில் 4வது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. ரயில் பயணிகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக சென்னை கடற்கரைக்கு பதிலாக சிந்தாதிரிபேட்டை- வேளச்சேரி மற்றும் வேளச்சேரி- சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் வேலைக்கு செல்வோர், சென்டரல் ரயில்களுக்கு செல்லும் மக்கள், மருத்துவமனைகள், ஐடி நிறுவனங்கள், கல்லூரிகளுக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த 4வது ரயில் பாதை அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாக பயணிகளால் குற்றம் சாட்டப்படுகிறது.
கடந்த மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடிந்திருக்க வேண்டும், ஆனால் அது தாமதமானது. அதற்கு பிறகு ஜூலை மாதம் முடியும் என்று ரயில்வே துறை தெரிவித்தது. ஆனால் அதுவும் முடியவில்லை. தற்போது அக்டோபர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்துவதில் மந்தமாக செயல்பட்டதாலும், முறையாக திட்டமிடல் இல்லாததுமே தாமதத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
குறிப்பாக இந்திய கடற்படையினரிடம் இருந்து 110 மீட்டர் நிலம், ரயில் பாதை அமைக்க அனுமதி பெற வேண்டும். இதற்கான அனுமதி பெறுவதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட திட்டமில்லாமல், 4வது ரயில் பாதை அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருவதால் மக்கள் தாங்க முடியாத அளவில் துயரங்களை சந்தித்து வருகின்றனர்.
வேலைக்கு செல்லும் பெண்கள், இளைஞர்கள் மிக அதிக அளவில் சிரமப்படுகின்றனர். ஏனென்றால் டைடல் பார்க், பெருங்குடி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதற்காக பெரம்பூர், ராயபுரம் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் இருந்து ஊழியர்கள் சிந்தாதிரிபேட்டை வந்து, ரயில்கள் வழியாக தங்களது நிறுவனத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டும். இது பொதுவாக கடற்கரையில் இருந்து செல்லும் பயணத்தை விட 1 அல்லது 2 மணி நேரம் கூடுதலாக இருக்கிறது எனவும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.