சேலம் பெரியார் பல்கலை கழகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள், கடந்த 2020 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக சீர்கேடுகள் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினர். இதனால் அதில் கலந்துகொண்ட நிர்வாகிகள் சக்திவேல், கனிவண்ணன் உள்ளிட்ட நால்வரையும் முதலில் இடை நீக்கம் செய்த துணைவேந்தர் பின்னர் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தொழிலாளர் நல ஆணையரகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் தொழிலாளர்கள் சட்டத்திற்கு எதிராகவும் , சட்ட விதிகளுக்கு விரோதமாகவும் துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் அப்போதைய பதிவாளர் பாலகுருநாதன் ஆகியோர் இருவரும், பழி வாங்கும் நோக்கோடு செயல்பட்டதாக விசாரணையில் உறுதியானது.
இதனையடுத்து தொழிலாளர்கள் சட்டத்திற்கு விரோதமாக ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் பாலகுருநாதர் ஆகியோர் மீது குற்றவியல் வழக்கு தொடர கடந்த மாதம் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை செயலாளர் அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டார்.
பின்னர் சேலம் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், சேலம் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் முன்னாள் பதிவாளர் பாலகுருநாதன் ஆகியோர் மீது குற்றவியல் வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொள்ள மனு அளித்தனர்.
இதனிடையே தொழிலாளர் நலத்துறை அரசு உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை முன்கூட்டியே தாக்கல் செய்து விட்டதாகவும், குற்றவியல் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு பின்பு இங்கு வழக்கு தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்து வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, வழக்கை திரும்ப பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.