சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி மற்றும் குடிமைப்பணி தேர்வுக்கான படிப்புக் கூடத்தின் துவக்கம், முன்னாள் படைவீரர் நலத் துறையினருக்கான முதல் கட்ட திறன் பயிற்சி, தமிழ்நாடு திறன் போட்டிகள், இந்திய திறன் போட்டிகள், நிரல் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,"தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு இடங்களில் வந்துள்ள நாளைய IAS, IPS, ரயில்வே வங்கி அதிகாரிகளான உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.எந்த ஒரு தேர்வையும் எதிர்கொள்ள நம்பிக்கை வேண்டும். முதலில் நம் மீது நம்பிக்கை வேண்டும். குறிப்பாக போட்டி தேர்வுக்கு தயாராகின்ற உங்களுக்கு நம்பிக்கை மட்டும் பத்தாது, தன்னம்பிக்கை வேண்டும் அப்படி தன்னம்பிக்கையுடன் போட்டி தேர்வு எழுதும் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
நாட்டுக்காக உழைத்த முன்னாள் படை வீரர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள 10 இடங்களை பல்வேறு திறன் பயிற்சிகள் பெரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஏராளமான செயல்களை நம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. உயர் கல்விக்கு வழிகாட்டும் வகுப்புகள் கல்லூரிகளில் திறன் சார்ந்த பயிற்சிகள் வேலைக்கு செல்பவர்களுக்கு திறமை வளர்ப்பதற்கான பயிற்சி என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இந்த நான் முதல்வன் திட்டம்.
நான் முதல்வன் திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களையும் அவர்களை முதல்வனாக உருவாக்க வேண்டும் என்பது இந்த திட்டத்தில் ஒரே நோக்கம். இந்தத் திட்டம் தொடங்கிய இரண்டு வருடத்தில் 30 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரை சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
பேரறிஞர் அண்ணா பள்ளிக்கல்வியை தரம் உயர்த்தினார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் உயர்கல்வியை தரம் உயர்த்தினார். இதனுடைய அடுத்த கட்டமாக நம் முதலமைச்சர் அவர்கள் திறன் மேம்பாட்டை உருவாக்கி திறன் பயிற்சி வேலைவாய்ப்பு என தமிழ்நாடு மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார்.
30 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து IAS, IPS, IFS, IRS போன்ற ஒன்றிய அரசு பணிகளுக்கு நிறைய பேர் தேர்வாகி சென்று உள்ளனர். ஆனால் தற்போது அது குறைந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்தக் குறையை போக்கவே நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நான் முதல்வன் போட்டித் தேர்வு சென்ற ஆண்டு தொடங்கி வைத்தார்கள். போட்டி தேர்வில் தயாராகும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்கள். அதன்படி அரசு நடத்துகின்ற தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் ஆயிரம் பேருக்கு பத்து மாதங்களுக்கு ரூபாய் 7500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். சென்ற ஆண்டு யுபிஎஸ்சி முதல் நிலை தேர்ச்சி பெற்ற 453 பேருக்கு தல ரூ.25,000 விதம் மொத்தம் ஒரு கோடியே 13 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் உதவி தொகையாக வழங்கப்பட்டது. நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் தொடங்கப்படுவதற்கு முன்பு முந்தைய ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து மொத்தமே 36 பேர் தான் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருந்தனர். இந்தத் திட்டம் வந்த பிறகு முதல் ஆண்டிலேயே 47 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வென்றுள்ளனர்.
இந்த திட்டம் வந்த பிறகு சென்ற ஆண்டு அகில இந்திய அளவில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்த ஆறு பேருமே நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள். நான் முதல்வன் போட்டித் தேர்வு தொடங்குவதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் இருந்து 585 பேர் யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றிருந்தனர் இந்த திட்டம் செயல்படுத்திய பிறகு 632 பேர் யுபிஎஸ்சி முதல் நிலையில் வெற்றி பெற்றுள்ளனர். அதில் 278 இளைஞர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். இதுதான் நான் முதல்வன் திட்டம் தொடங்கியதற்கான வெற்றி.
போட்டித் தேர்வு என்றாலே இலட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். என்னதான் கடினமாக உழைத்தாலும் மிக சிலருக்கு தான் அரசு பணி கிடைக்கிறது. திறமை இருந்தாலும் சரியான வழிகாட்டுதலும் பொருளாதாரம் இல்லாத காரணத்தினாலும் பலரால் தொடர்ந்து தேர்வுக்கு தயாராக முடியவில்லை. இதனால் சாதாரண குடும்பத்தில் இருந்து வரும் பல ஆயிரம் மாணவர்கள் ஒருமுறை தவற விட்டாள் மீண்டும் பயிற்சி எடுக்க முடியுமா?சென்னை மாதிரி பெருநகரங்களில் தங்கி படிப்பதற்கு அதிகம் செலவாகுமே என சந்தேகங்கள் கேள்விகள் தடைகளை நீங்கள் சிந்தித்துள்ளீர்கள்.
போட்டித் தேர்வுக்கான கட்டணம் இல்லாத ஸ்டடி ஹால் மற்றும் உண்டு உறைவிட பயிற்சி பள்ளி இங்கே நாங்கள் தொடங்கி வைத்துள்ளோம். சென்னை கோவை மதுரை மண்டலங்களில் போட்டி தேர்வுகளில் பங்குபெறும் மாணவர்களுக்கு கட்டணம் இல்லா தங்கும் வசதி நம் அரசு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களை எல்லாம் நம் முதலமைச்சர் அவர்கள் பெற்றோர் இடத்திலிருந்து யோசித்து செயல்படுத்தி உள்ளார். ஒன்றிய அரசு பணி என்பது உங்கள் கனவு வெல்லட்டும்.
கடந்த ஆண்டு தமிழ்நாடு திறன் போட்டிகளை தொடங்கி வைத்து மாநில அளவில் 87 பேர் தேசிய அளவில் நடைபெற்ற இந்தியா திறன் போட்டியில் பங்கேற்றார்கள் அந்த போட்டியில் ஆறு தங்கப் பதக்கம், எட்டு வெள்ளி பதக்கம், எட்டு வெண்கல பதக்கம் என 9 சிறப்பு பதக்கம் என தமிழ்நாட்டு இளைஞர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய திறன் போட்டிகளில் தமிழ்நாடு 10வது இடத்தில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பத்தாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்தில் வந்துள்ளது. உங்கள் திறனை அங்கீகரிக்கும் வகையில் தங்கப் பதக்கம் வெல்லும் இளைஞர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வெள்ளிப் பதக்கத்திற்கு ரூபாய் 50,000 வெண்கல பதக்கத்திற்கு ரூபாய் 30,000 சிறப்பு பதக்கம் வென்றவர்களுக்கு 25 ஆயிரம் மற்றும் இதர பங்கேற்பாளர்களுக்கு ரூபாய் 20000 என ரொக்க பரிசு இங்கே வழங்கியுள்ளோம்.
தொழில் துறை வல்லுநர்கள் ஸ்டார்ட் அப் முதலீட்டாளர்களின் மூலம் உங்களின் படைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு சிறந்த 50 படைப்புகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது என்றார். தமிழ்நாட்டு இளைஞர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை உங்களுடைய திறமைக்கு சரியான களம் அமைத்துக் கொடுக்கவும் கரம் பிடித்து அழைத்துச் செல்லவும் நம் முதலமைச்சர் உள்ளார் எனவே முன்னேறி செல்லுங்கள் வெற்றி உங்களுக்கு நிச்சயம்” என தெரிவித்துள்ளார்.