சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள லயோலா கல்லூரியில் சமூக பணிகள் படிப்புக்கான முதுகலை மற்றும் ஆய்வு துறை, மற்றும் இந்திய சமூக அறிவியல் ஆய்வு கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான சமூக பணி பார்வையில் கல்யாணம் குடும்பம் மற்றும் தொழிலாளர் சந்தையின் பங்கு என்கின்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் அமைச்சர் சி.வி. கணேசன், போர்டு மோட்டார் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கணக்கியல் செயல்பாட்டு துறை இயக்குநர் தனுஜா பாலாஜி ஆகியோர் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சி வி கணேசன், “பெண்கள் இல்லாமல் யாரும் இல்லை. அந்த காலகட்டத்தில் ஓடுகின்ற நதிக்கு கூட பெண்களின் பெயர்கள் தான் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பவானி, கங்கை, யமுனை, கோதாவரி, வைகை போன்ற பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டிற்கு கூட தந்தை நாடு என்று பெயர் இல்லை, தாய்நாடு என்று தான் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயற்கை பெண்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. ஆனால் மனிதர்கள் தான் பெண்களை மதிக்க தவரவிட்டார்கள்
பல ஆண்டுகாலம் பெண்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள். கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். என்றாவது ஒருநாள் ஒரு விடிவு காலம் பிறக்குமா என்று ஏங்கி இருக்கிறார்கள் அதை கேட்க ஒரு தலைவர் வந்தார் அவர் தான் தந்தை பெரியார்.
அந்த காலத்தில் கணவர் இறந்துவிட்டால் மனைவியை தூக்கி நெருப்பில் எரித்து விடுவார்கள். ஆனால், பெண்கள் இறந்தால் கணவரை நெருப்பில் போடமாட்டார்கள். இதைத்தான் பெரியார் கேட்டார் ஏன் பெண்களை மட்டும் நெருப்பில் போடுகிறீர்கள் ஆண்களை நெருப்பில் போடாமல் இருக்கிறீர்கள் என்று.
இத்தகைய நிலை ஒழிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும், அவர்களும் சிந்திக்க வேண்டும், கணவன் இறந்து விட்டால் மறுமணம் செய்து கொள்ள வேண்டும், விதவயாக இருக்க கூடாது என்று நினைத்தார். ஆகவே அத்தகைய உரிமையையும், அதிகாரத்தையும், தெளிவையையும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பெரியார் சொன்னார்.
பெண்கள் வேலைக்கு செல்லக்கூடிய சதவீதம் 47.3 சதவீதம் உலக அளவில் உள்ளது. இந்தியாவில் 24 சதவீதம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 42 சதவீதம் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடியவர்களாக உள்ளனர். முதலில் நம் அனைவரும் பெண்களை மதிக்க வேண்டும். நம் தாயை, தங்கையை மதிக்க வேண்டும் எல்லோரும் பெண்களை மதித்தால் தானாகவே சமூகத்தில் பெண்களுக்கு மதிப்பு உண்டாகிவிடும்.
பெண்மையை நாம் போற்ற வேண்டும் பெண்மையை மதிக்க வேண்டும். முதலில் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொடுங்கள். மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் பயத்தை தூக்கிப்போட்டு வாழ்கையில் வெற்றி பெற வேண்டும்.” என்றார்.