மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் 81-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ அரை கிராம் மதிப்புள்ள தங்க மோதிரத்தை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ பேசியதாவது, “ஒரே நாடு ஒரே தேர்தல் இந்திய அரசியல் சாசனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. தொழில்நுட்ப ரீதியாகவும் சாத்தியப்படாது. பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து பல்வேறு சிக்கல்களை மாநில அரசுக்கு ஏற்படுத்தி வருகிறது. பாஜக ஆளுநர்களை வைத்து பல்வேறு சிக்கல்களை மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது.
எங்களைக் கூட்டணிக்கு அழைக்க வேண்டுமென்ற ஆசைகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கலாம். ஆனால் எங்களைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. திமுக கூட்டணியில் பிரச்னை வருமா? தலைவர்கள் மாறுவார்களா? என்பது எடப்பாடி பழனிசாமியின் விருப்பம். திமுக - மதிமுக கூட்டணி வருங்காலங்களிலும் எந்த பிரச்னையும் இருக்காது.
திமுக தலைமையிலான நல்ல கூட்டணியில் இருக்கிறோம். விஜய் மாநாட்டுக்கு மதிமுக போக வேண்டிய அவசியம் கிடையாது. பெரியாரை முன்னிறுத்தி செயல்படுவதால் விஜயை சார்ந்தோ அல்லது அவரை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.