திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (20). இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்த சூழலில் இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இவர்கள் காதல் விவகாரத்துக்கு சம்மதிக்கவில்லை.
இதனால் காதலர்கள் கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, மதுரை அருகே இலுப்பைக் குளத்தில் நண்பர் வீட்டில் இருந்துள்ளனர். இதனிடையே இளம்பெண்ணை தேடி வந்த பெண் வீட்டார், காதலர்கள் இருக்கும் இடத்தை அறிந்துகொண்டனர். இதையடுத்து பெண்ணின் உறவினரான அருணகிரி என்பவர் கடந்த 16-ம் தேதி காதலர்களை தேடி சென்றனர்.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், வழக்கறிஞருமான அருணகிரி, சாமிக்கண்ணு, கார்த்திக், பிரவின் குமார் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து, காதலர்கள் இருக்குமிடத்திற்கு சென்று, அவர்களை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி வந்துள்ளனர். மேலும் தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச்சென்று, இளைஞரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
தொடர்ந்து இளைஞரின் சாதி பெயரை குறிப்பிட்டு அவதூறாக பேசியதோடு, அவரது மர்ம உறுப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலமாக தாக்கியுள்ளனர். மேலும் இளைஞர் சந்தோஷிடம் இருந்து, செல்போன், 20 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து துவரங்குறிச்சி என்ற பகுதி அருகே உள்ள மோர்ணிமலை என்ற இடத்திற்கு இளைஞரின் பெற்றோரை வரச் சொல்லி அவரை அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட இளைஞர் சந்தோஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி அருணகிரி (35) பிரவீன் குமார் (24), கார்த்தி (38) ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய நாதக நிர்வாகி உள்பட மூன்று பேரையும் கைது செய்த வளநாடு போலீசார் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் வரும் 30-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி (பொறுப்பு) பாலாஜி உத்தரவிட்டார். இதனையடுத்து மூவரும் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
கொலைவெறி தாக்குதல் நடத்தி கைது செய்யப்பட்டுள்ள நாதக நிர்வாகி அருணகிரி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி பின்னர் நாம் தமிழர் கட்சியில் இணைந்து கட்சிப்பணியாற்றியுள்ளார். அப்போதே சட்டம் பயின்று வழக்கறிஞராக பார் கவுனிசிலில் பதிவும் செய்துள்ளார். மேலும் இவர் 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் மணப்பாறை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.