பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியாரின் திருவுருவப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை பேசியதாவது, “தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாளில் தமிழக காங்கிரஸ் சார்பாக மலர் அஞ்சலி செலுத்தியிருக்கிறோம். தந்தை பெரியார் விதைத்த மூடநம்பிக்கைகள் அகற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு எல்லா உரிமையும் பெற்றுத் தர வேண்டும் என்ற அடிப்படையில், சாதி மதம் அற்ற சமூகத்தை படைக்க வேண்டும் என்றார் தந்தை பெரியார்.
தமிழ்நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும். பெரியாரின் பணிகளும் நீண்ட நெடிய நாட்களுக்கு தொடரும். ஒன்றய அமைச்சர் தமிழகத்திலிருந்து ஆலயத்தை மீட்டெடுக்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறார். இறைவன் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். ஆலயம் அனைவருக்கும் சமம் அதை அரசிடம் இருந்து பிரித்தெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார். அது ஏன்? என தெரியவில்லை. பழைய ஆச்சாரங்களை மீண்டும் திணிக்க முயற்சி செய்கிறார்களா? ஒருபோதும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
காலகாலமாக அடக்குமுறை ஒடுக்குமுறை ஆலய வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் பல பெரியார்கள் தேவைப்படுகிறார்கள். ஒன்றிய நிதியமைச்சர் ஆலய வழிபாட்டை பற்றி பேசி இருக்கிறார். தமிழக மக்கள் அதை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டு கடல் தாமரை மாநாடு கன்னியாகுமரியில் நடத்தினார்கள்.
மோடி பிரதமரானால் ஒரு மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்றும், சர்வதேச எல்லைகள் கடற்படை நிறுத்தப்படும் என்றும், ஒருபோதும் ஒரு தீங்கும் நடக்காது, சிறை பிடிக்க மாட்டார்கள், படகுகளை பறிமுதல் செய்ய மாட்டார்கள் என்றும் உத்தரவாதம் கொடுத்தார். ஆனால் பத்தாண்டுக்கு மேல் கடந்துவிட்டது.
தற்போதும் மீனவர்கள் சிறை பிடித்து தண்டனை பெறுகின்றனர். குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஒரு நியாயம். இதுதான் பாசிசம். தமிழ்நாட்டு மீனவர்களை முழுமையாக பாஜக புறக்கணிக்கிறது இதைவிட முன் உதாரணம் எதுவும் இருக்க முடியாது” என்றார்.