சந்தன மரங்களுக்கான விலையை, ஆண்டுகளின் அடிப்படையில் நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. அதன் படி, கடந்த 4 ஆண்டுகளுக்கான மரங்களுக்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுமார் 15 வகையான சந்தன மரங்களுக்கு, மரங்களின் வகைகளுக்கேற்ப விலை நிர்ணயித்து, நியாய விலை மற்றும் சில்லறை விலை இரண்டையும் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
2020-21ஆம் ஆண்டு முதல் 2023-24ஆம் ஆண்டுக்கான மரங்களுக்கு, அவற்றின் தரம், வகைகளுக்கேற்ப விலை என்ற வகையில் சோட்லா வகை சந்தன மரத்துக்கு நியாய விலையாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு, ரூ.1 கோடியே 64 லட்சத்து 35.2 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே வகை மரத்துக்கு சில்லறை விலையாக 2020-21ஆம் ஆண்டு மரத்துக்கு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.1 கோடியே 91 லட்சத்து 63,443 ஆகவும், 2021-22-ம் ஆண்டு மரத்துக்கு 6% விலை உயர்வுடன், ரூ.2 கோடியே 3 லட்சத்து 13,250 ஆகவும், 2022-23-ம் ஆண்டுக்கு, ரூ.2 கோடியே 15 லட்சத்து 32,045 ஆகவும், 2023-24-ம் ஆண்டுக்கு ரூ.2 கோடியே 28 லட்சத்து 23,967 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நியாய விலையை விட, சில்லறை விலைக்கு ஒவ்வோர் ஆண்டுக்கு 6% விலை அதிகரித்து நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், கட்பெல்லா, ரூட்ஸ், ஜஜ்போகல், எய்ன்பகர், செரியா, ஐன்சிட்லா, மில்வாசிட்லா, பசோலா புக்னி, தீயால் பாதிக்கப்பட்ட மரங்கள் மற்றும் சா டஸ்ட் என்று ஒவ்வோர் வகை மரங்களுக்கும் 6% வித்தியாசத்தில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.