தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் இன்றும், நாளையும் ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டி நடைபெறுகிறது. இந்த கார் பந்தயத்திற்காக தீவு திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு வரை 3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட் (சாலை) அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து சென்னை சாலைகளில் F4 கார்கள் சீறிப்பாய்ந்தன.
இந்த கார் பந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்பீடு, ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்டெஸ்டர் உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. ஒரு அணிக்கு 2 வீரர்கள் வீதம் 16 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் பயன்படுத்தப்படும்.
இன்று பயிற்சி போட்டிகள் மட்டும் நடைபெறுகிறது. நாளை தகுதிச்சுற்று மற்றும் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது. மேலும், இது தெற்காசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது.