சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள நடேசன் வித்யாலயா பள்ளியில் இரண்டு நாட்கள் நடைபெறும் அறிவியல் கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், ”மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை இந்த அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அதனால்தான், புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ரூ.7 கோடி வரை தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இப்படி புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தினால்தான் மாணவர்கள் இன்னும் அதிகமான கண்டுபிடிப்புகளை உருவாக்குவார்கள். பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சியை அரசு அளிக்கிறது, இதுவரை 8 லட்சத்து 98 ஆயிரத்து 812 மாணவர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு Start Up தமிழநாடு கடைசி இடத்தில் இருந்தது. தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்தாண்டு மூன்றாவது இடம் பிடித்தது. இந்த ஆண்டு இந்தியாவிலேயே Start Up நிறுவனங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது" என தெரிவித்துள்ளார்.