பட்டியலினங்களைச் சேர்ந்த பட்டதாரி மாணவ-மாணவிகள் வெளிநாடுகளில் உயர் கல்வி பயில்வதற்கான உதவித்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், இத்திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாக ஒரு சில பட்டதாரிகள் மட்டுமே பயன்பெற்றுள்ளனர்.
இக்குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, இத்திட்டத்தின் மூலம் பயனடையக்கூடியவர்களின் உச்சவரம்பு உள்ளிட்ட பல விதிகளை மறுசீரமைத்தது. இதன் மூலம் ஏராளமானோர் உயர் கல்வி பயில்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, 8 லட்சத்துக்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட பட்டியலின சமூகங்களைச் சேர்ந்த பட்டதாரிகள், வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயில ஆண்டுக்கு 36 லட்சம் ரூபாய் வரை உதவித் தொகை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதுநிலை பட்ட படிப்புகளுக்கு 35 வயதுக்கும், முனைவர் பட்ட படிப்புக்கு 40 வயதுக்கும் குறைவாக இருக்க வேண்டும். மாற்றி அமைக்கப்பட்ட விதிகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 120 பட்டதாரிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்தின் விதிகள் எளிமைப்படுத்தப்பட்டு, தேர்வுக் குழுவும் நீக்கப்பட்டுள்ளதால், பட்டியலின மாணவ- மாணவிகள் வெளிநாடுகளில் கல்வி பயல்வது அதிகரித்துள்ளதாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஜி.லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் இவ்வாண்டு 75 பட்டியலின மாணவ- மாணவிகள் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதுநிலை கல்வி பயில தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.