அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம், மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், இளங்கலை பட்டம் சான்றிதழுக்கான கட்டணம் போன்றவற்றின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதுகுறித்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, "பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளுடைய தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதாக முந்தைய ஆண்டு சிண்டிகேட் அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்னதாகவே அறிவித்திருந்தது. ஓராண்டு காலம் முடிவடைந்த நிலையில் தற்போது கட்டணம் உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. மாணவர்கள் கிராமபுறங்களில் வந்திருப்பதாகவும் ஏழை மாணவர்கள் இருப்பதாகவும் தேர்வு கட்டணத்தை குறைக்க சொல்லி மாணவர்கள் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்கள்.
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் செயலாளர்களுடன் ஆலோசித்து சிண்டிகேட்டிலே முடிவு எடுத்து இருந்தாலும், தற்போது தேர்வு கட்டணம் நிறுத்தி வைக்கப்படுகிறது. தேர்வு கட்டணத்தை உயர்த்துவது மாணவர்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்தாண்டும் வருகின்ற ஆண்டும் இனி வரக்கூடிய நாட்களிலும் தேர்வு கட்டணம் அதிகரிக்காது.
தற்போது கட்டக்கூடிய தேர்வு கட்டணமே இனி நடைமுறையில் இருக்கும். தன்னாட்சி மற்றும் தன்னாட்சி இல்லாத கல்லூரிகளிலும் தற்போது செமஸ்டர் தேர்வுகள் எவ்வளவு வசூலிக்கிறதோ அதையே வசூலிக்க வேண்டும் என ஆணை வழங்கப்படும். செமஸ்டர் தேர்வுகள் கட்டணம் அதிகரித்தால் அரசே உடனடியாக நடவடிக்கை எடுக்கும்" என்றார்.