அசாம் மாநிலம், ஹொஜை பகுதியில் வசித்து வரும் சிறுமி ஒருவர் கடந்த 20-ம் தேதி தனது தாயிடம் ஏற்பட்ட சண்டை காரணமாக கோபித்து வீட்டை விட்டு சென்றுள்ளார். இதையடுத்து தனது மகளை காணவில்லை என்று போலீசாரிடம், சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடி வந்த நிலையில், சிறுமி சென்னைக்கு வந்துள்ளார்.
பின்னர் சென்னை போலீசார் கொடுத்த தகவலின் பேரில் சிறுமி பத்திரமாக விசாகப்பட்டின இரயில் நிலையத்தில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :
அசாம் மாநிலம், ஹொஜை பகுதியை சேர்ந்த சிறுமி, தாயிடம் சண்டைபோட்டு கோபித்துக்கொண்டு சென்றவர், திருவனந்தபுரம் இரயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரி செல்வதாக, திருவனந்தபுரம் காவல்துறையிலிருந்து கன்னியாகுமரி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. பின்னர் விசாரணை செய்தபோது மேற்படி சிறுமி நாகர்கோயில் இரயில் நிலையத்தில் இறங்கியது தெரியவந்தது.
தொடர்ந்து அந்த சிறுமி மீண்டும் வ.எண். 12634 கன்னியாகுமரி - எழும்பூர் விரைவு இரயில் வண்டியில் ஏறி பயணம் செய்து எழும்பூர் வர வய்ப்புள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையிடமிருந்து தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் எழும்பூர் இரயில் நிலையத்தில் CCTV கேமராவை ஆய்வு செய்து தேடிவந்தனர்.
அப்போது 21.08.2024-ம் தேதி (நேற்று) காலை சுமார் 06.30 மணியளவில் எழும்பூர் இரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார் சிறுமி. அவ்வாறு இறங்கிய சிறுமி, நடைமேடை எண். 05 மற்றும் 06-ல் சுற்றி திரிந்த பிறகு வ.எண். 22842 தாம்பரம் - சந்திரகாஞ்சி விரைவு இரயில் எழும்பூர் இரயில் நிலையத்தில் காலை 08.10 மணிக்கு ஏறி பயணம் செய்வதாக கிடைத்த தகவலையடுத்து வழியில் உள்ள இருப்புப்பாதை காவல் மற்றும் இரயில்வே பாதுகாப்புபடை காவல் நிலையங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தொடர்ந்து தேடி வந்த போலீசார், சிறுமியை சுமார் இரவு 08.30 மணியளவில் விசாகபட்டினம் இரயில் நிலையத்தில் மீட்டனர்.
இரயில் பயணிகள் பாதுகாப்பு சம்மந்தமான புகார்களுக்கு 24x7 இருப்புப்பாதை காவல் உதவி மைய எண். 1512 மற்றும் வாட்ஸ் அப் எண். 99625-00500 ஐ தொடர்பு கொள்ளவும்.