தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று ஒன்றிய நுகர்வோர் நலம்,உணவு மற்றும் பொது விநியோகத் திட்ட அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களை புது தில்லி சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின்போது தமிழ்நாடு மாநிலத்திற்கு வரவேண்டிய உணவு மானிய நிலுவைத் தொகை ரூ. 3191 கோடி,ஆறு ஆண்டுகளுக்கான இறுதிக் கணக்குகளை முடித்து அதில் வர வேண்டிய தொகை,தமிழ்நாட்டின் கோதுமைத் தேவையான 23000 மெட்ரிக் டன்னுக்குப் பதிலாகத் தற்போது வழங்கி வரும் 8561 மெட்ரிக் டன் ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்கல்,
மாநில அரசின் திட்டங்களுக்கு ராகி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தல் மற்றும் கூடுதலாக வழங்கும் அரிசிக்கு நிரணயித்துள்ள விலை(கிலோ ஒன்றுக்கு ரூ28 )யைக் குறைத்து ரூ20/-க்கு வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை அளித்தார்.
அதற்குப் பதிலளித்த ஒன்றிய அமைச்சர் கணக்குகளை ஒத்திசைவு செய்து மானியத்தை விரைவில் விடுவிப்பதாகவும் கோதுமை விளைச்சல் ஒரே சீராக இருப்பதால் ஒதுக்கீட்டைக் கூட்டுவதில் சிரமம் இருப்பினும் அதிகரிக்கக் கனிவுடன் பரிசீலிப்பதாகவும் கூறினார்.
இச்சந்திப்பின்போது பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா உடனிருந்தனர்.