தமிழ்நாட்டில் பிரபல கோயில்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு வருகின்றனர். இங்கு அமைந்திருக்கும் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட்டு வந்த நிலையில், திடீரென அதற்கு கோவில் தீட்சிதர்கள் கடந்த ஆண்டு அனுமதி மறுத்தனர்.
ஆனி திருமஞ்சன விழா நடைபெறுவதால் கனகசபை மீது ஏறி 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை வைத்த நிலையில் அதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே பக்தர்கள் அனைவரும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஆணை வெளியிட்டிருந்த நிலையில், அதையும் தீட்சிதர்கள் ஏற்காமல் இருந்தனர்.
எனினும் தமிழ்நாடு அரசு தீட்சிதர்கள் வைத்த அறிவிப்பு பலகையை அகற்றி பக்தர்களை கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதித்தது. இதனிடையே சிதம்பரம், நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழாவின்போது பக்தர்கள் கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழங்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என கூறப்பட்டது. அதே நேரம் விழா காலங்களில் பக்தர்களை கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் அனுமதிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது தரிசனம் செய்வதை தடுக்க கூடாது என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர். முன்னதாக இந்த வழக்கில் சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.