சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2024 - 25 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் மருத்துவம் சார்ந்த (Paramedical) பட்டப் படிப்புகளுக்கான தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
அது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியது வருமாறு :
2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் மருத்துவம் சார்ந்த (Paramedical) பட்டப் படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரியில் உள்ள நிர்வாக மருத்துவர் இடங்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் கடந்த 31.07.2024 முதல் வரவேற்கப்பட்டு 09.08.2024-ம் தேதி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது.
மொத்தம் 43 ஆயிரத்து 63 விண்ணப்பங்கள் வரப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 2,721 அதிகம் , இதில் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள் இட ஒதுக்கீட்டிற்கு 3733 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவிற்கு 343 விண்ணப்பங்களும், முன்னாள் படை வீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 45 விண்ணப்பங்களும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கிட்டு பிரிவிற்கு 133 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலும் மற்றும் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கான பட்டியலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
=> அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் - 6,630
=> அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த பி.டி.எஸ். இடங்கள் - 1,683
=> 7.5% ஒதுக்கீட்டுக்கான அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் - 496
=> 7.5% ஒதுக்கீட்டு இடங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த ஒதுக்கீடு இடங்கள் - 126
2024 - 2025 ஆம் ஆண்டுக்கான மருத்துவ மற்றும் பல் மருத்துவ சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு :
=> அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் - 6,630
=> அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பி.டி.எஸ். இடங்கள் - 1,683
=> மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் - 29,429
=> ஏற்றுக் கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் தகுதி உடையவர்கள் - 28,819. இதில், மாணவர்கள் -10,704; மாணவிகள் - 18,114
2024 -2025 ஆம் ஆண்டுக்கான 7.5% அரசுப் பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கிட்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், சுய நிதி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு :
=> அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் - 496
=> அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பி.டி.எஸ். இடங்கள் - 126
=> மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் - 3,733
=> ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் தகுதி உடையவர்கள் - 3,683. இதில் மாணவர்கள் - 1,041; மாணவிகள் - 2,642
2024 - 2025 ஆம் ஆண்டிற்கான சுயநிதி மருத்துவம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ( மேனேஜ்மென்ட் கோட்டா ) :
=> நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்கள் - 1,719
=> நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள மொத்த பிடிஎஸ் இடங்கள் - 430
=> மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் - 13,618
=> ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் தகுதி உடையவர்கள் - 13,417. இதில் மாணவர்கள் - 6462; மாணவிகள் - 8755
கடந்த ஆண்டை விட 150 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கன்னியாகுமரி ரிசர்ச் சென்டரில் 100 மாணவர்கள் அதிகம் சேர்க்கப்பட உள்ளனர். 7.5% இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை அரசு பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் ரூபிகா - 669 (செண்டர் ஆப் அகாடெமிக் எக்செலன்ஸ் சைதாப்பேட்டை). பொது கலந்தாய்வில் முதலிடம் பெற்ற மாணவர் ரஜினிஷ் - 720 மதிப்பெண்கள் பெற்றவர் (கிரீன் பார்க் இண்டர்நேஷனல் பள்ளி, நாமக்கல்).
அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க தொடங்கப்பட்ட சைதாப்பேட்டை செண்டர் ஆப் எக்சலென்ஸ் என்ற பயிற்சி மையத்தில் முதல் முறையே, முதல் 10 இடங்களில் 4 மாணவர்கள் 7.5% இடஒதுக்கீட்டில் தேர்வாகியுள்ளது இமாலய சாதனை. அரசு ஒதுக்கீட்டில் திருநங்கை ஒருவரும் தேர்வாகியுள்ளார்.
மருத்துவ கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் தொடங்குகிறது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கு ஓமந்தூரார் பல் நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நேரடியாக கலந்தாய்வு நடைபெறும்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது. அகில இந்திய அளவில் நீட் தேர்வு பிரச்னை பரவியுள்ளது. நீட்டில் இருந்து விலக்கு தர வேண்டும் என்று அகில இந்திய தலைவர்கள் கேட்டுள்ளனர். மாநில உரிமைகளை எப்போதும் திமுக விட்டுக் கொடுக்காது" என்றார்.