கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துக் கழகங்களில் நிதி சூறையாடப்பட்டு, போக்குவரத்து கழகம் நிதி நெருக்கடியில் இருந்து வந்தது. இந்த சூழலில் தி.மு.க ஆட்சிக்கு பொறுப்பேற்ற பின்னர் போக்குவரத்துக் கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
தமிழக பெண்கள் நகரப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற விடியல் பயணம் என்ற மகத்தான திட்டம் அறிவிக்கப்படப்பின்னர் கூட அதற்காக நிதியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறைக்கு வழங்கி வருகிறது. மேலும் போக்குவரத்துத் துறைக்கு ஏராளமான புதிய பேருந்துகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில், அரசு பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்துத் துறை சார்பில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்த ஒரு கருத்துருவும் தமிழ்நாடு அரசிடம் இல்லை என்றும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கு பாதிக்காத வண்ணம் கட்டண உயர்வில்லாமல் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கி வரும் சூழலில், கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளதாக தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.