தமிழ்நாடு

தரமற்ற ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள குளிர்பானங்கள் அழிப்பு... குடோனுக்கு சீல் - உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!

தரமற்ற ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள குளிர்பானங்கள் அழிப்பு... குடோனுக்கு சீல் - உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருவண்ணாமலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பத்து ரூபாய் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குளிர்பானங்கள் தயாரிக்கும் இடங்களை சோதனை செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை பெரம்பூர் புழல் முருகேசன் தெருவில் உள்ள "கங்கை புட் ப்ராடக்ட்ஸ்" என்ற தனியார் குளிர்பானகங்கள் தயாரிக்கும் வீட்டில் (தொழிற்சாலை) சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.‌

10 ரூபாயில் விற்கப்படும் சிறிய அளவிலான குளிர் பானங்கள் எந்தவித சுகாதாரத் தன்மையுமின்றி, உணவுப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள், காலாவதி தேதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இல்லாமல் தரமற்ற முறையில் தயாரிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

தரமற்ற ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள குளிர்பானங்கள் அழிப்பு... குடோனுக்கு சீல் - உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!

இதனையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அங்குள்ள இயந்திரங்கள் மற்றும் ஜூஸ் தயாரிக்க உபயோகிக்க பயன்படுத்தப்படும் பொருட்களை ஆய்வு செய்து தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 35 ஆயிரம் மதிப்புள்ள குளிர்பானங்கள் கண்டறிந்து அழிக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். பின்னர் குளிர்பானம் தயாரிக்கும் குடோனுக்கு சீல் வைத்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்து ரூபாய் குளிர்பானம் குடித்து ஒரு குழந்தை இறந்துள்ளதாக செய்தி வந்ததன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ள முடிவெடுத்தோம்.

அதன்படி சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பத்து ரூபாய் குளிர்பானங்கள் சட்ட விரோதமாக தயாரிக்கபடுவதாக எங்களுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனை அடுத்து நாங்கள் இந்த முகவரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தபோது, இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் உள்ளே கலர் கலரான ரசாயனங்கள் மூலம் குளிர்பானங்கள் தயாரித்து பத்து ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர்.

இந்த வீட்டில் தரமற்ற முறையில் சுகாதாரமின்றி குளிர்பானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த குளிர்பானங்கள் உள்ளிட்ட 35 ஆயிரம் மதிப்புள்ள அனைத்து பொருட்களையும் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீட்டிற்கு சீல் வைக்கப்படும். இந்த குளிர்பானகங்கள் குடிப்பதன் மூலம் அதில் கலக்கப்பட்டுள்ள ரசாயனம் உடலில் ஒட்டிக் கொள்ளும் இதனால் வாய்ப்புண், தொண்டைப்புண், குடல் புண் உள்ளிட்டவை ஏற்படும்.

தரமற்ற ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள குளிர்பானங்கள் அழிப்பு... குடோனுக்கு சீல் - உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!

மேலும் குழந்தைகள் தொடர்ந்து இந்த குளிர்பாகனங்களை குடித்து வந்தால் கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டு கேன்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு முதல் பாதிப்பாக வாந்தி வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படும் இந்த பாதிப்புகளை மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறாவிட்டால் உயிரிழப்பு ஏற்படலாம்.

பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு பொருட்களின் காலாவதியான தேதி, நிறுவனத்தின் பெயர், நிறுவனத்தின் விலாசம், FSSAI எண்கள் உள்ளிட்டவை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். இது போன்ற அங்கீகரிக்கப்படாத குளிர்பானங்களை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டாம் என உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னையில் இது போன்ற அங்கீகரிக்கப்படாத குளிர்பானங்கள் தயாரிக்கப்படுவதை கண்டால் உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் அப் 94404 23222 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இன்று இந்த நிறுவனத்தில் கைப்பற்றப்பட்டுள்ள மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி 15 நாட்களுக்கு பிறகு வரும் ஆய்வு முடிவுகளை கொண்டு இந்த குளிர்பானங்கள் தயாரிக்கும் ஆலை தொடர்ந்து செயல்படலாமா அல்லது செயல்பட கூடாதா என்று முடிவு செய்யப்படும்" என்றார்.

banner

Related Stories

Related Stories