சென்னை சூளைமேட்டில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெறும் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு மற்றும் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் சிற்றரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆணையர் அமுதவல்லி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விழா மேடையில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது, "பெரிய பிள்ளையாக வளர்த்து வேலை வாங்கி கொடுத்து, என்னை விட என் பிள்ளை அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று தாய் தந்தை நினைக்கிறார்கள். வளர்ந்த பிறகு பெற்றோர்களை காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் உண்டு.
வயதானவர்கள் 'சாப்பிட்டியா, தூங்கிட்டியா' என்று கேட்க ஒரு ஆள் வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒருவர் உதவியோடுதான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற நிலைமை உள்ளது. பெண்கள் இதுபோன்ற விஷயங்களை மூட்டை கட்டி வைக்க வேண்டும். எந்த முதியோராக இருந்தாலும் அவர்களை பாதுகாப்பது பராமரிப்பது நமது கடமை.
முதியோர் பராமரிப்பு மையங்கள் அதிகரிக்க கூடாது என்பதுதான் முதலமைச்சரின் எண்ணம் பராமரிப்பு இல்லத்தை நாம் குறைத்திட வேண்டும். இன்று எடுத்த உறுதிமொழியை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் பெண்களைப் படிக்கவே விடமாட்டார்கள், வகுப்பறையில் 50 பேர் இருந்தால் அதில் 2 பேர்தான் பெண்கள் இருப்பார்கள். அதுபோன்ற நிலைமை இருந்தது.
பெண்கள் படிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் பெரியார். இவர்களைத் தொடர்ந்து பிறகு அண்ணா, கலைஞர். இப்படி தொடர்ந்து குரல் கொடுத்த பிறகுதான் மகளிர் பள்ளி, கல்லூரிகள் உருவாக்கப்பட்டது.
திருமண உதவி திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர். 30% பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் கலைஞர். சொத்துரிமை கொண்டு வந்தவர் கலைஞர். பெண் சமுதாயம் முன்னேறினால்தான் தமிழ் சமுதாயம் முன்னேறும் என்று திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர்.
முதலமைச்சர் தற்போது பெண்களுக்கு பல திட்டங்களை வடிவமைத்து வருகிறார். தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தை நிறைவேற்றி வருகிறார்கள். அதில் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். அனைத்து உதவி எண்களையும் பெண்கள் தெரிந்து கொண்டு வைத்து இருக்க வேண்டும், யார் அழைத்தது என்பது குறித்து ரகசியம் காக்கப்படும்.
இவ்வளவு முன்னேறிய காலத்திலும் 9 வயது குழந்தைக்கு திருமணம் செய்கிறார்கள், அறியாமல் இதை செய்கிறார்கள். இந்த டீன் ஏஜ் வயதில் நல்ல முடிவை எடுக்க பழகிக்கொள்ள வேண்டும். நாம் எடுக்கும் முடிவுதான் நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும். கண்டிப்பாக பெண்கள் நன்றாக சாப்பிட வேண்டும். பெண்கள் வலிமையாக இருக்க வேண்டும். பெண்கள் சாப்பாடை ஒதுக்கக் கூடாது, நல்ல ஊட்டச்சத்து உள்ள உணவை சாப்பிட வேண்டும். ஆசிரியர்கள் அதைக் கண்காணிக்க வேண்டும்.
குறைவான மதிப்பெண் எடுத்தால் சோர்ந்து போக கூடாது. எந்த சூழ்நிலையோ அதற்கு நம்மை மாறிக்கொள்ள பழகி வேண்டும். என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். முடியாது என்று சொன்னால் ஒரு படி கீழே இறங்கி விடுவாய். எப்போதும் தன்னம்பிக்கையோடு இருங்கள் என்னால் எல்லாம் முடியும் என்று தன்னம்பிக்கையோடு இருந்தால் அனைத்தையும் சாதிக்க முடியும்.
பெண்களை எளிதாக அடிமைப்படுத்துவது ஆடை அலங்காரங்கள். அதற்கும் அடிமையாகக் கூடாது; நகைக்கும் அடிமையாகக் கூடாது. எதிர் பாலினத்தவர் மீது இந்த வயதில் ஒரு ஈர்ப்பு இருக்கும். இந்த வயதில் வரும் காதலை காதல் என்று நினைத்து ஏமாற வேண்டாம். இந்த வயதை கடந்து வரும் பொழுது முடிவெடுத்துக் கொள்ளுங்கள். ஆசிரியர்கள் மூத்தோர்கள் சொல்லும் வழியில் நடந்தால் நல்ல எதிர்காலம் கிடைக்கும்" என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது, "அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பெண் கல்வி உயர்கல்விக்காக வழங்கப்படும் புதுமைப்பெண் திட்டம் மூலம் ஆண்டுக்கு மூன்றே கால் லட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். மூன்றாவது வருடம் படிக்கும் பெண்கள் புதுமைப்பெண் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவில்லை என்றால் இந்த ஆண்டு கூட விண்ணப்பிக்கலாம்.
9 ஆம் தேதி கோவையில் மாணவர்களுக்காக தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைக்கவுள்ளார்கள். திட்டங்களை மட்டும் அல்லாமல் உரிமைகளை நிலைநாட்ட கூடிய விழிப்புணர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளிச் சீருடைகள் தாமதமாக வழங்கப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரியாமல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். சில பள்ளிகளில் அளவு சரியாக இல்லாமல் இருந்ததாக சில புகார்கள் வந்தது. தையல் சொசைட்டியில் உள்ள பெண்கள் நேரடியாக பள்ளிகளுக்குச் சென்று அளவெடுத்து அந்தந்த பிள்ளைகளுக்கு தனித்தனியாக பள்ளிச் சீருடைகள் தைக்கப்படுகிறது. அதனால் சிறிது காலதாமதம் ஏற்பட்டது. 4 செட் பள்ளி சீருடை உண்டு, விரைவில் இந்த மாதம் வழங்கி விடுவோம். அளவெடுத்து தைப்பதால் 15 நாட்கள் தாமதம் ஆகிவிட்டது.
குழந்தை திருமணம் தொடர்பாக தற்பொழுதும் புகார் வருகிறது.விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். தமிழ்நாட்டில் குழந்தை திருமணங்கள் குறைந்து வருகிறது. குழந்தை திருமணங்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதியோர் காப்பகத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அதிகரிக்க கூடாது என்பதற்காக விழிப்புணர்வு செய்து வருகிறோம். முதியோர்களை சுமையாக எண்ணக்கூடாது" என்றார்.