முரசொலி தலையங்கம்

“பொய் வண்டிகளை நிறுத்துங்கள்” - பட்டியலிட்டு பாஜக அரசை விமர்சித்த முரசொலி !

“பொய் வண்டிகளை நிறுத்துங்கள்”  - பட்டியலிட்டு பாஜக அரசை விமர்சித்த முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ரூ.6 ஆயிரம் கோடியை தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கியதாகவும், ஏராளமான புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாகவும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சொல்லி இருக்கிறார். ஒரு காலத்தில் இதற்கு புகைவண்டி என்று பெயர். பா.ஜ.க. ஆட்சியில் பொய் வண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு எந்தப் புதிய திட்டமும் இல்லை. நிதிநிலை அறிக்கைக்கு முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்த நான்கு திட்டங்களில் எதற்குமே நிதி ஒதுக்கவில்லை. இதைப் பற்றிக் கேட்டதும், ரயில்வே துறையின் சார்பில் தமிழ்நாட்டுக்கு 6, 362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி சொல்லி இருக்கிறார். இது ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் 3.49 விழுக்காடு ஆகும். 9 விழுக்காட்டுக்கும் மேல் வருமானம் ஈட்டித் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு ரயில்வே துறையின் சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது இவ்வளவுதான்.

சட்டமன்றத் தேர்தல் வரப் போகும் மகாராஷ்டிராவுக்கு ரூ.15, 940கோடியை ஒதுக்கி இருக்கிறார்கள். உத்தரப் பிரதேசத்துக்கு 19, 848 கோடி ரூபாயும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.14,738 கோடியும் ஒதுக்கி இருக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் பீகார் மாநிலத்துக்கு ரூ.10,033 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.9,151 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இருந்தே பா.ஜ.க.வின் பாரபட்ச முகம் வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது.

“பொய் வண்டிகளை நிறுத்துங்கள்”  - பட்டியலிட்டு பாஜக அரசை விமர்சித்த முரசொலி !
ANI

தமிழ்நாட்டுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் என்ன, புதிய ரயில் பாதைகள் வரப்போகிறதா, நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கப் போகிறார்களா என்பதற்கான தகவல்கள் ஏதுமில்லை. "ரயில்வேயின் ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் அடங்கிய "பிங்க் புத்தகம் ' இதுவரை ஏன் வெளியிடப்படவில்லை?” என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேட்டிருக்கிறார். அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது பா.ஜ.க. அரசு?

பா.ஜ.க. ஆட்சிக்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அறிவிக்கப்பட்ட பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு பா.ஜ.க. ஆட்சியில்நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை திட்டமானது 2006ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டமாகும். இன்னமும் முடியவில்லை. வேலூர் மாவட்டம் அத்திப்பட்டு - புத்தூர் ரயில் திட்டம் 2008 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இன்னமும் ஒப்பந்தப் புள்ளியே கோரப்படவில்லை. திண்டிவனம் - நகரி திட்டம் பாதியில் நிற்கிறது. திருப்பெரும்புதூர் - கூடுவாஞ்சேரி திட்டம் 2012 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அது கிடப்பில் கிடக்கிறது. மாமல்லபுரம் - கடலூர் திட்டம் 2008 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்படியே கிடக்கிறது. ஈரோடு - பழனி திட்டம் 2008 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதுவும் கிடப்பில் கிடக்கிறது. மதுரை - தூத்துக்குடி திட்டம் 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்துக்கு இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி ரூ.350 கோடிதான். இதில் இருந்தே இவர்கள் எத்தனை பொய் வண்டிகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியலாம்.

ஏன் புதிய ரயில்வே திட்டங்களைக் கொண்டு வரவில்லை என்று கேட்டால், 'தமிழ்நாடு அரசு நிலங்களை கையகப்படுத்தி தரவில்லை' என்ற அடுத்த பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி. இதற்கு விரிவான அறிக்கையை தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டு இருக்கிறார்.

“பொய் வண்டிகளை நிறுத்துங்கள்”  - பட்டியலிட்டு பாஜக அரசை விமர்சித்த முரசொலி !

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் இரயில்வே திட்டங்களுக்கு மொத்தமாக 2443 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய ஏற்கனவே தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் வெளியிட்டு உள்ளார். தூத்துக்குடி- மதுரை (வழி - அருப்புக்கோட்டை) புதிய அகல ரயில்பாதை, திருவண்ணாமலை - திண்டிவனம் புதிய அகல ரயில்பாதை, ஈரோடு மாவட்டத்தில், கதிசக்தி பல்முனை மாதிரி சரக்கு முனையம் அமைக்க நிலம் - ஆகிய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மொத்த அளவு 1226.88 ஹெக்டேர் ஆகும். நிலத்தை கையகப்படுத்த வேண்டியது மாநில அரசின் பணி .அதைச் செய்து விட்டது தமிழ்நாடு அரசு. அதற்கான நிதியை வழங்க வேண்டியது ஒன்றிய அரசு. நில எடுப்புக்கு நிதி வழங்காததால்தான் நிலங்கள் அப்படியே கிடக்கின்றன. இதற்கு ரயில்வே அமைச்சரின் பதில் என்ன? ஒவ்வொரு திட்டத்துக்கும் 88 முதல் 188 விழுக்காடு வரை நிலங்கள் எடுத்து தமிழ்நாடு அரசு கொடுத்துவிட்டது. அவர்கள் பணம் கொடுத்து வாங்கவில்லை. இது யாருடைய தவறு?

தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களாக இருந்தால் அவை அனைத்துக்கும் அரசாணைகள் போடப்பட்டுள்ளது. ஒன்றிய பாதுகாப்புத் துறையின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள நிலங்களை கையகப்படுத்த அந்தத் துறைகளுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கைகள் வைத்து கடிதம் அனுப்பி உள்ளதே தவிர, அவர்கள் ஒப்புதல் வழங்காமல் வைத்துள்ளார்கள். இது யாருடைய தவறு?

ஆட்சிக்கு வந்ததும் ரயில்வே துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை ஒழித்தார்கள். ஆண்டுக்கு 12 கோடி மூத்த குடிமக்களுக்கு பலன் அளித்து வந்த சலுகைகளை ஒழித்தார்கள். இதுபோன்ற 'சாதனைகள்' தான் தொடர்கிறதே தவிர புதிய திட்டங்களும் இல்லை. வளர்ச்சியும் இல்லை. பொய் வண்டிகளை நிறுத்தி விட்டு, புதிய வண்டிகளை, பாதைகளை அமையுங்கள்.

banner

Related Stories

Related Stories