முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவு மாரத்தான் - 2022 மூலம் திரட்டப்பட்ட தொகை மூலம் சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளுக்கும் சேர்த்து கட்டப்பட்டு வரும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உடன் இருப்போர் தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டிட பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, "ரூ.5.89 கோடி மதிப்பில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, தாய் சேய் நல மருத்துவமனக என இரு மருத்துமனைகளுக்கும் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் பெற்றோர் தங்கும் வகையில் 4 தளங்களுடன் தங்கும் விடுதி கட்டப்படுகிறது. ஒவ்வொரு தளத்திலும் தலா 25 அறைகள், சமையல் அறையுடன் கட்டப்படுகிறது.
2022-ம் ஆண்டு நடைபெற்ற கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி மூலம் ரூ.1.22 கோடி பதிவுக் கட்டணமாக பெறப்பட்ட நிதி, NULM அமைப்பின் மூலம் ரூ.2.28 கோடி, நமக்கு நாமே திட்டம் மூலம் மீதத் தொகை ஒதுக்கப்பட்டு ரூ.5.89 கோடியில் இப்பணி நடைபெறுகிறது. இவ்விடுதியில் தரைத்தளத்தில் 100 பேர் அமர்ந்து ஒரே நேரத்தில் உணவருந்த முடியும். இரு மருத்துவமனைக்கும் வரும் பெற்றோர் சாலையில் படுத்துறங்கும் நிலையே இருந்தது. தற்போது அவர்களுக்காக இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.6.17 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடம் அமைச்சர் உதயநிதியால் திறக்கப்பட உள்ளது. இன்போசிஸ் நிறுவனம் சிஎஸ்ஆர் நிதி மூலம் ரூ.30 கோடியில் பரயல மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது. அதில் ரூ.10 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணம் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கும், ரூ.20 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனைக்கும் வழங்கப்பட உள்ளது.
இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கட்டடம் ரூ.10.27 கோடியில் கட்டப்பட உள்ளது , நாளை மறுநாள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதற்கான அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும் இராயப்பேட்டை மருத்துவமனையில் ரூ.35 கோடியில் அவசர சிகிச்சைக்கான புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. மொத்தம் ரூ.46.8 கோடியில் புதிய கட்டடங்கள் இராயப்பேட்டை மருத்துவமனையில் கட்டப்பட உள்ளன.
காவிரியில் நீர் அதிகம் செல்லும் நிலையில் கரையோர மாவட்டங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு பலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காவிரிக் கரையோர மாவட்டங்களில் நேற்று 50 க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. தேவைப்பட்டால் கூடுதலாக முகாம்கள் நடத்தவும் அறிவுறுத்தியுள்ளோம். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் சிசிடிவி காட்சி அடிப்படையில் 1 மணி நேரத்திலேயே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விட்டனர்" என்றார்.