அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு மகத்தானது – வரவேற்கத்தக்கது என்றும், 2009 இல் முத்தமிழறிஞர் முதலமைச்சர் கொண்டு வந்த இந்தச் சட்டம் செல்லத்தக்கது என்று உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்திருப்பது – ‘திராவிட மாடல்‘ ஆட்சிக்குக் கிடைத்த ஆகஸ்டுப் புரட்சி வெற்றியாகும் என்றும், நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘திராவிட மாடல்‘ ஆட்சியில் சமூகநீதி, ஜீவநதியாக கடைமடை வரை பாய்ந்து செழிப்பாக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் உள்ள அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு 3 விழுக்காடு அளித்து, 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி (27.2.2009) தமிழ்நாட்டில் நடைபெற்ற மானமிகு முதலமைச்சர் கலைஞர் தமது ஆட்சியில் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றி செயல்படுத்தினார்.
அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம்!
அதற்குமுன் முறைப்படி அன்றைய முதலமைச்சர் கலைஞர் ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினைக் கூட்டினார். அதில், எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சியினரையும் அழைத்துக் கருத்துக் கேட்டார்கள்.
அதற்குத் தொடக்க உரையில், எஸ்.சி,. எஸ்.டி., பிரிவு என்று பட்டியல் ஜாதியினரிடையே மூன்று முக்கிய பிரிவுகள் உள்ள நிலையில், மிகவும் வாய்ப்புக் குறைவாக கீழ் அடுக்கில் அருந்ததிய சமூக மக்கள் பெரும் ‘பசியேப்பக்காரர்களாகவே‘ தொடரும் அவலத்தைப் போக்கவேண்டியது – சமூகநீதிக் கிட்டச் செய்வதன் முக்கியம் ஆகும் என்பதை விளக்கிய நிலையில், மற்ற பல கட்சியினரும் சட்டம் இயற்றுவதை வரவேற்றனர். ஆனால், ‘புதிய தமிழகம்‘ கட்சித் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் மட்டும் இதனை எதிர்த்துப் பேசி, வெளிநடப்பே செய்தது ஒரு விரும்பத்தகாத நிகழ்வாக அன்று இருந்தது!
ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்பு!
ஆந்திராவில் (அப்போது தெலங்கானா மாநிலம் பிரியவில்லை) அங்குள்ள மாலா, மாடிகா என்ற பிரிவினருக்கு இப்படித் தனியே இட ஒதுக்கீடு தந்ததை எதிர்த்து ஈ.வி.சின்னய்யா என்பவர் தொடர்ந்த வழக்கில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவின்கீழ் உள் ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று கூறி, சட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம்.
நடைமுறையில் இந்த 3 சதவிகித அருந்ததியரின் தனி உள் ஒதுக்கீடு காரணமாக, நல்ல அளவுக்கு அச்சமூக இளைஞர்கள் பலன் பெற்றனர்; கல்வியிலும், வேலை வாய்ப்பிலும். தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பான வகையில், அச்சட்டத்தை மறுக்க இயலாத வண்ணம் அமைத்திருந்ததால், இச்சட்டம் நிலைக்காது என்று ‘ஆலமரத்து ஜோசியர்கள்‘போல, ஆத்திர அவசரக்கார அரசியல்வாதிகள் சொன்னபோது, அப்போது நம்மைப் போன்றவர்கள் தக்க முறையில் பதில் அளித்து வந்தோம்!
உச்சநீதிமன்றத்தின் சிறப்பான தீர்ப்பு!
நேற்று (1.8.2024) ஏழு நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட (சிறப்பு) அமர்வு – இப்படி அருந்ததியினருக்குத் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு மூன்று விழுக்காடு வழங்கிடும் சட்டம் செல்லுபடியாகும் என்று ஏழு நீதிபதிகளில் ஒருவர் தவிர, பெரும்பான்மையாக 6 நீதிபதிகள் – தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்பட சிறப்பான தீர்ப்பை – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமூகநீதி தீர்ப்பை அளித்துள்ளது பாராட்டத்தக்க தீர்ப்பாகும்!
''அருந்ததியர்களுக்குத் தனி உள் ஒதுக்கீடு தந்து தமிழ்நாடு அரசு (தி.மு.க. கலைஞர் அரசு) கொண்டு வந்து செயல்படுத்திய 2009 ஆம் ஆண்டைய சட்டம் செல்லுபடியாகும்; அது அரசமைப்புச் சட்டத்தின் 14 ஆவது பிரிவினை மீறியதாகக் கூறப்படும் வாதம் ஏற்கத்தக்கதல்ல.
ஒரே ஒரு நீதிபதியைத் தவிர...
பட்டியலின உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையிலிருந்து விலக்கப்படவில்லை. எனவே, எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் உள் ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை. எனவே, எஸ்.சி,. எஸ்.டி., பிரிவில் உள் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும்'' என்று ஏழு நீதிபதிகள் அமர்வில், ஒரே ஒரு நீதிபதியைத் தவிர மற்ற 6 நீதிபதிகள் (தலைமை நீதிபதி உள்பட) தெளிவாகவே குறிப்பிட்டனர். ஒரு நீதிபதி (ஜஸ்டிஸ் பேலாதிரிவேதி) மட்டும் மாறுபட்ட தீர்ப்பினை (Dissenting Judgement)தந்தார்!
ஆந்திர உயர்நீதிமன்றம் முன்னதாக அளித்த தீர்ப்பு தவறானது!
தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் டி.ஒய்.சந்திரசூட் உள்பட இந்த சிறப்பான வரவேற்கப்படும் 6 நீதிபதிகள் தந்துள்ள தீர்ப்பில், ''அருந்ததியருக்கென தனி உள் ஒதுக்கீடு செல்லும்; முந்தைய 2005 ஆம் ஆண்டு ஆந்திரா வழக்கில் தரப்பட்ட உள் ஒதுக்கீடு ஏற்கத்தக்கதல்ல என்கின்ற தீர்ப்பு – அது செல்லாது'' என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். அதே தீர்ப்பில், ''சில நீதிபதிகள் தமது கருத்துரையாக (ஆணையாக அல்ல) ‘‘கிரிமீலேயர் முறை‘ எஸ்.சி., எஸ்.டி., பட்டியலின மக்களுக்கு அவசியம் என்று கூறியிருக்கும் கருத்து, சரியான சமூகநீதிக் கண்ணோட்டப்படி ஏற்கத்தக்கதல்ல. அவர்களே குறிப்பிட்ட 15(4) முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் அடிப்படை தத்துவத்திற்கு முற்றிலும் முரணானது.'' இதுபற்றி தனியே விரிவாக பிறகு வேறு ஓர் அறிக்கையில் விளக்குவோம்.
தமிழ்நாடு சட்டத்துடன், பஞ்சாப் மாநில சட்டமும் செல்லும் என்ற தீர்ப்பு!
இந்த தமிழ்நாடு சட்டத்துடன், அரசு வேலை வாய்ப்புகளில் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதமாக பஞ்சாப் மாநில அரசு கொண்டு வந்த சட்டமும் செல்லும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் டி.ஒய்.சந்திரசூட் அவர்கள் தீர்ப்பில் விளக்கும்போது, 'எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் பாகுபாட்டின் காரணமாக வளர்ச்சியைக் காண முடியாது. மேலும், இரு பிரிவில் உள்ள இவர்கள் ஒரே மாதிரியான நிலையில், வளர முடியவில்லை என்பதை வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, அனைத்து வகுப்பினரிடையும் ஒரே மாதிரியான சமூக நிலை இருக்காது'' என்றும் தெரிவித்துள்ளனர்.
(நாளேடுகளில் வந்துள்ள தகவல்படி நாம் இதனை இப்போது எழுதினாலும், முழுமையான தீர்ப்பினை இரண்டொரு நாளில் படித்து, இது சம்பந்தமான பல கருத்தாக்கங்களை மேலும் விளக்கி எழுதுவோம்).
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சமூகநீதி ஜீவநதியாகப் பாய்ந்தோடும்!
''இது சட்டத்தில், உச்சநீதிமன்றத்தில் நிற்காது; தோற்றுப் போய்விடும்! செல்லாததாகிவிடும்'' என்று ‘சாபம்‘ கொடுத்த சமூகநீதிக்கெதிரான சலங்கைக் கட்டி ஆடிய மாமுனிவர்களுக்கும் இது படுதோல்வியே!
எல்லா மாநிலங்களிலும் அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும். சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நமது முதலமைச்சர் ஆட்சியில், சமூகநீதிக் களம் மேலும் விரிவான வெற்றிகளைப் பெறுவது உறுதி! கலைஞர் ஆட்சியின் சட்டம் சரித்திர முக்கிய வெற்றியைப் பெற்றிருக்கின்றது. 'திராவிட மாடல்' அரசின் ஆகஸ்டுப் புரட்சி செய்தியாகும்.
இதில் புதிரை வண்ணார் என்ற 'பார்த்தாலே தீட்டு' என்ற கொடுமையை பல காலம் அனுபவித்தவர்களுக்கு ஒரு சதவிகித இட ஒதுக்கீட்டை உள் ஒதுக்கீட்டைத் தந்தால், மேலும் சமூகநீதி ஜீவ நதியாகப் பாய்ந்து கடைமடைக்கும் சேர்ந்து செழிப்பாக்கும், ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களாக!