தமிழ்நாட்டின் நீண்டகால முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவரும், சுமார் 49 ஆண்டுகள் தி.மு.க.வை தலைமை தாங்கிய தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் அமைதி பேரணி நடத்தப்படுவதாக அறிவித்துள்ளது சென்னை மாவட்ட தி.மு.க.
இது குறித்து சென்னை மாவட்ட தி.மு.க வெளியிட்ட அறிக்கையில்,
தகைமைசால் தலைவராக, எழுத்தாளராக, கவிஞராக, சொற்பொழிவாளராக, திரைக்கதை வசனகர்த்தாவாக, இலக்கியவாதியாக, திரைப்படத் தயாரிப்பாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, தமிழகத்தின் ஐந்து முறை முதலமைச்சராக, உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவரும், திராவிட இயக்கத்தின் போர்வாட்களில் ஒருவராகத் தமது பொதுவாழ்வைத் தொடங்கி, பின்னர், காஞ்சி தந்த காவியத் தலைவர் அறிஞர் அண்ணா அவர்களோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி, அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்டவர் முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் கலைஞர்.
அவரின் 6வது நினைவுநாளினையொட்டி முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் கலந்து கொள்ளும் "அமைதிப் பேரணி”, ஆகஸ்ட்-7, புதன்கிழமை அன்று காலை 7.00 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை நடைபெறும்.
இதனை, அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள்- முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மகளிர் தொண்டர் அணி, கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, நெசவாளர் அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல்தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய அனைத்து அணியினரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர் என சென்னை கிழக்கு - சென்னை வடக்கு - சென்னை வடகிழக்கு - சென்னை மேற்கு - சென்னை தென்மேற்கு - சென்னை தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.